Thursday 21 July 2011

                                                                       தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும்
                                “மனிதநேயச் செய்திகளும் அன்னை தெரசாவின் வாழ்வியலும்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.
முன்னுரை
    “பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சேவை செய்யும் கரங்கள் உன்னதமானவை“ எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் அன்னை தெசரா.  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட அப்புனிதத்தாய் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும், நோயாளிகளுக்கும் உதவுவதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று சகோதரத்துவம் பேசிவரும் தமிழ் இலக்கியங்கள் தொன்று தொட்டு மனித நேயத்தையே வலியுறுத்துகின்றன.  அம்மனிதநேயத்தையே தன் வாழ்வியல் இயக்கமாகக் கொண்டு வாழ்ந்த அன்னை தெரசாவின் மனிதநேய வாழ்வியல் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
பிறருக்கு உதவுவதே வாழ்வின் நோக்கம்
    “ஒருவன் உலகத்தையே ஆதாயமாக்கிக் கொண்டாலும் ஆத்மாவை இழந்தால் என்ன பயன்?“1  என்ற இயேசுநாதரின் வினா, வாழ்வின் நோக்கத்தைப் புரிய வைக்கிறது.  அனைவரும் இறைவனின் மக்கள் என்ற நிலையில் ஒருவர் மற்றவருக்கு உதவுதலும், தொண்டாற்றுவதும் அவசியமாகிறது.
    “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்2 என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கேற்பச் சமத்துவ சமுதாயம் அமைக்க அன்னைதெரசா உறுதி பூண்டார்.  நிகோலஸ் பொஞ்சாஸ்க்யூவின் மகளாகக் கோன்ஸா என்ற பெயரில் யூகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி நகரின் தோன்றிய அன்னை தெரசா பன்னிரண்டாம் வயதில் சமூக சேவையைத் தொடங்கினார்.
    “தனக்கென வாழ்பவன் இருந்துமே இறக்கிறான்! பிறர்க்கென வாழ்பவன் இறந்தாலும் இருக்கிறான்“ என்ற வரிகளுக்கேற்ப மறைந்த பின்னரும் புனிதராய் அவர் வாழக் காரணம் அவருடைய மாசுமருவற்ற தொண்டுள்ளம்தான்.  பதினெட்டு வயதில் கோன்ஸா உறுதியான முடிவெடுத்து “சிஸ்டர்ஸ் ஆஃப் லொரெட்ரோ“ எனும் கிறித்துவசபையில் சேர்ந்து ஆக்னஸாக மாறினார்.  இந்தியாவுக்குச் சென்று ஏழைமக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற தனியாத ஆர்வம் கொண்ட சகோதரி ஆக்னஸ் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு 1929ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.  கால்பதித்த முதலிடம் பம்பாய் துறைமுகம்.  அங்கிருந்து தொடர் வண்டியில் கிளம்பி கல்கத்தா வந்தார்.
மணிமேகலையும் மனிதநேய மேகலையும்
    திருமணம் முடிக்க வேண்டிய இளம்வயதில் புத்த சமயத் துறவியாக முழுமையாய்மாறி உன்னதமான துறவுவாழ்வை மேற்கொண்டவர் மணிமேகலை.  அன்னை தெரசாவும் பதினெட்டு வயதில் லொரோட்டோ அருட்சகோதரிகள் அமைப்பில் சேர்ந்து ஏழைகளுக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்டவர்.  கல்கத்தா வந்திறங்கிய உடன் கத்தோலிக்க சபை அன்னையின் பெயரை மாற்றப்பணித்தது.  காச நோயாளிகளைக் காக்கத் தன் வாழ்வையே பணயம் வைத்து 24ஆம் வயதில் அக்காசநோயுக்குப் பலியாகிப் போன பிரான்ஸ் நாட்டு அருட்சகோதரி தெரசா மார்ட்டின் பெயரைத் தன் பெயராக அந்த அருட்சகோதரி வைத்துக் கொண்டு கல்கத்தா நகரில் தொண்டாற்றத் தொடங்கினார்.
    பாத்திரம் பெற்ற காதையில் பசியின் கொடுமையை மணிமேகலைக்கு உரைக்கும் தீவதிலகையின் கூற்றினைச் சீத்தலைச் சாத்தனார்,
    குடிப் பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்
    பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்
    நாண்அணி களையும் மாணெழில் சிதைக்கும்
    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
    பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர்
    இசைச் சொல் அளவைக் கென்நா நிமிராது3
என்று கூறுகிறார்.    
    மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“4
என உணவு கொடுத்தவர்களைச் சீத்தலைச்சாத்தனார் உயிர் கொடுத்தவர்களாக மனித நேயத்தோடு மதிக்கிறார்.  தீராப்பழி ஏற்றுச் சிறைச்சாலையிலே இருந்தபோதும் தன்னிலை குறித்துச் சிறிதும் வருந்தாமல் அமுதசுரபியிலிருந்து அமுதினை அள்ளி வழங்கி மணிமேகலை பசிப் பிணியை அகற்றுகிறார்.  அதேபோன்று அன்னை தெரசா கல்கத்தா நகரத்து வீதிகளிலே நடந்து திரிந்து பசியுடன் இருந்த குழந்தைகளை அள்ளித் தூக்கி அமுதூட்டினார்.  அன்னை தங்கியிருந்த மேரியன்னை மடத்தில் நின்று பார்த்தால் கல்கத்தாவில் உள்ள குடிசைப் பகுதிகள் தெளிவாகத் தெரியும்.  மணிமேகலையைப் போல் ஓடோடிச் சென்று அவர்களின் பசியகற்றினார்.  புண்களுக்கு மருந்திட்டார்.  வயோதிகம் காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட முதியோரை அழைத்துச் சென்று காத்தார்.  வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்“ என வருந்திய வள்ளலாரைப் போல அன்னை தெரசா மனிதர்களின் பசித்த வயிறுகளைக் கண்டு வாடினார்.
    “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.  அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்“5 என்று திருமந்திரத்திலே திருமூலர் கூறுவதைப் போல, அன்னை தெரசா ஏழைகளுக்கு அன்பு செய்தலில் இறைவனைக் கண்டார்.  1942-43ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக வங்காளத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, உணவுத்தட்டுப்பாடு, இடநெருக்கடி, உள்நாட்டுக் கலகங்கள் இந்தியாவை ஆட்டிப்படைத்த காலகட்டத்தில் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்குத் தொண்டாற்றினார்.  லொரேட்டா சபையின் சட்டதிட்டப்படிச் செயல்பட வேண்டி இருந்ததால், மக்களின் பசிப்பிணி அகற்றித் தொண்டாற்ற அன்னை தெரசா பாப்பரசரிடம் அனுமதி கேட்டுக்கடிதம் எழுதினார்.
மருத்துவ சேவை
    கல்கத்தா மாநகரில் உள்ளோரைத் தன் சகோதர சகோதரிகளாகக் குழந்தைகளாக அன்னை தெரசா நினைத்தார்.  இராமகாதையிலே இராமரை வர்ணிக்கும் கம்பநாடர்,
   
“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு, பின் குன்று சூழ்வான்
    மகனோடும் அறுவர் ஆனோம், எம் உழை அன்பின் வந்த
    அகன்அமர் காதல்ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
    புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை“6
எனும் பாடலின் பொருள்களுக்கு ஏற்ப, அன்னைக்கு யாவரும் உறவினர்தாம்.  “மிஷனரி ஆஃப் சாரிட்டி“ எனும் அமைப்பை அன்னை உருவாக்கிய பின் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21இல் “மோத்திஜில்“ எனும் பகுதி சென்று மக்களைச் சந்தித்தார்.  அன்பென்னும் மழையிலே அகிலங்கள் நனையவே மாட்டுத் தொழுவத்தில் மாணிக்கமாய் வந்துதித்த இயேசுபிரானை நினைவுபடுத்துவது போல் மாட்டுத் தொழுவத்திற்கு அருகே பள்ளியைத் தொடங்கினார்.  பாரதி தெய்வத்திடம் கேட்ட வரத்தைப் போல்
    “பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
    கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
    மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
    விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்,
    யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
    இன்ப முற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும், தேவ தேவா“7
என்று அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டினார்.  ஏழை மக்களுக்காகக் கையேந்தி நடந்தபோது வெற்றிலை வாயோடு தன் மீது காறி உமிழ்ந்த மனிதன் மீதும் அன்பு பாராட்டினார்.  தொழுநோயாளிகளைத் தொட்டு தூக்கினார்;  மருந்திட்டார்;  ஆதரவற்ற குழந்தைகளை இறைவனின் மக்கள் என்று கொண்டாடினார்.
    “மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார்,
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார். செவ்வி
    அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
    கருமமே கண் ஆயினார்“8
என்ற குமரகுருபரரின் வாக்கிற்கிணங்க அன்னை தெரசா இரவு பகல் பாராமல் ஏழைகளுக்காக உழைத்தார்.  நாற்பதுகளின் தொடக்கத்திலேயே புற்றுநோய், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான முறைகளை அன்னை கற்றறிருந்தார்.
ஈகையே மனிதநேயம்
    கடையெழு வள்ளல்களை நமக்குக் கற்றுத் தந்தமொழி உன்னதத் தமிழ்மொழி.
    என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்று
    இவர்கள் எண்ணும் முன்னே
    பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
    போதாது போதாது என்றால்
    இன்னும் கொடுப்பான் இவையாவும் குறைவென்றால்
    எங்கள் கர்ணன்
    தன்னைக் கொடுப்பான், தன்உயிரும்தான்கொடுப்பான்
என்று கர்ணனுக்குப் பாடிய கண்ணதாசனின் வரிகள் அன்னை தெரசாவுக்கும் பொருந்தும்.  போப்பாண்டவர் தமக்களித்த விலை உயர்ந்த மகிழ்வுந்தினை ஏலமிட்டு அப்பணத்தை ஏழைகளின் சிகிச்சைக்குத் தந்தவர் அன்னை.
மனித நேய அன்னை
    உலகின் பெரிய பரிசுகளான நோபல் பரிசு, பாரத ரத்னா பரிசு போன்ற எல்லாப் பரிசுகளையும் பெற்றிருந்தும் எளிமையையே அன்னை தெரசா கடைப்பிடித்தார்.  1997 மார்ச் 13இல் “மிஷனரி ஆஃப் சாரிட்டி“ அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அன்னை விலகினார்;  சாதாரணத் தொண்டரானார்; ஏழைகளை இறைவன் கொடுத்த வரமாகக் கருதியவர், காளிகட் முதியோர் இல்லத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.  செப்டம்பர் 5, 1997இல் ஆசிரியர் தினத்தன்று அனைவர் மனத்திலும் நீங்காமல் வாழ்பவர்; உடலால் மறைந்தார்.
முடிவுரை
    பிரபல இதழுக்கு அன்னை தெரசா தந்த பேட்டியின் இறுதி வரிகள் “நேற்று என்பது என் கையை விட்டுப் போய்விட்டது.  நாளை என் கையில் வரும் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை.  இன்று என் கையில் இருக்கிறது.  இன்றைய தினம் என்னால் ஏழைகளுக்கும், நோயாளிக்கும் என்ன உதவி செய்ய முடியுமோ அதனைச் செய்துவிட வேண்டும்.  தாமதப்படுத்தக் கூடாது.  இதுதான் எனது திட்டம்” என்று அமைந்தன.  இறைப் பணியாளராய், வணக்கத்திற்குரியவராய் தன் சேவையின் மூலம் மகிழ்ச்சி அடைந்த அன்னை தெரசா, இந்த நூற்றாண்டு விழாவில் புனிதராய் பாப்பரசரால் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே உலகத்தாரின் உயர் விருப்பமாய் அமைகிறது.  அன்னை தெரசா அகிலத்தின் வழிகாட்டி அல்லர்; மனிதநேயத்தின் வாழ்ந்து காட்டி
அடிக்குறிப்புகள்
1.    திருவிவிலியம், மத்தேயு, 16:26
2.    கண்ணதாசன், கண்ணதாசன் கவிதைகள், ப.7.
3.    மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, ப.218.
4.    மேலது, ப.219.
5.    திருமூலர், திருமந்திரம், ப.286.
6.    கம்பராமாயணம், பா.6507.
7.    பாரதியார், மகாகவி பாரதியார் கவிதைகள், ப.101.
8.    குமரகுருபரர், நீதிநெறி விளக்கம், பா.52.

No comments:

Post a Comment