Wednesday, 13 July 2011

                                          உலகக் காப்பியங்களுக்கு நிகரான தமிழ்க்காப்பியங்கள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வு முன்னுரை
    காப்பியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக அமைகின்றன.  பண்பாட்டின், இலக்கியப் பதிவாக, காலச் சுவடாக, வாழ்வியல் நகலாக அமையத்தக்கன காப்பியங்கள்.  தொல்லிலக்கிய வகை சார்ந்த காப்பியங்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றாகவே அமைகின்றன.  காப்பியத்தைக் குறிக்கும் “எபிக்“ எனும் சொல் “எபோஸ்“ எனும் கிரேக்க மொழியில், சொல் அல்லது பாடல் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.  நெடுங்கதையைச் செய்யுளில் தரும் இலக்கியவகையைத் தமிழில் காப்பியம் என்கிறோம்.   இனக்குழு வாழ்க்கை வாழ்ந்தபோது சமுதாயம் எனும் அமைப்பைக் கட்டிக்காக்க வீரத்தை முன்னிறுத்திக் காவல் காக்க நல்ல முன் மாதிரி மனிதர்களைக் காட்டி அவர்களைப் போல் வாழவைக்கத் தமிழில் காப்பியங்கள் படைக்கப்பட்டன.  இனக்குழுத்தலைவன் காப்பியத் தலைவனாக்கப்பட்டான்.  அவனது நற்செயல்களால் அவன் இறைநிலைக்கு உயர்த்தப்பட்டான்.  வீரம், நேர்மை, ஒழுக்கம், நீதி ஆகியன காப்பிய மறைபொருளாக உட் பொதிந்து தரப்பட்டன.
தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
    பெருங்காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் அறம், பொருள், இன்பம் வீடுபேறு எனும் நால்வகைப் பொருளை முன்நிறுத்தினார்.
    “நாற்பொருள் பயக்க நடைநெறித்தாகித் தன்னிகரில்லாத் தலைவனை யுடைத்தாய்“ என்று தன்னிகரில்லாத் தலைவனைச் சுட்டுகிறார்.  தமிழ்க் காப்பிய மாந்தர்கள் இராமனும், சீவகனும், உதயகுமாரனும், உதயணனும் தன்னிகரில்லாத் தலைவர்களாகப் படைக்கப்பட்டனர்.
    அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினையும் நம்மால் உணர முடியும்.  ஆனால் நான்காம் பொருளான வீடுபேற்றை நம்மால் உணரவோ சிந்தையைச் செலுத்தவோ முடியாது என்ற பரிமேலழகரின் கருத்துநிலையே பல தமிழ்க் காப்பியங்களின் கருத்துநிலை.
    தமிழின் செவ்வியல் இலக்கியக் காலமான சங்க காலத்தில் நீண்ட காப்பியங்கள் வழக்கில் இல்லை.  மூன்றடிச் சிற்றெல்லை முதல் 782 அடிப் பேரெல்லைவரை அமைந்த நீண்ட தனிப்பாடல் அமைப்பே வழக்கத்தில் இருந்தது.  யாப்பில் அமைந்த காப்பியங்கள் இல்லையே தவிர வாய்மொழி இலக்கியங்கள் தெருக் கூத்தாக நிகழ்த்தப் பெற்றன.  அக்கதைகளே செய்யுள் வடிவத்தில் தமிழில் காப்பியமாய் மலர்ந்தன.  பேரியாற்றங்கரையில் குன்றக் குறவர்களே கண்ணகி பற்றிக் கூறினர்.
    சிலம்பில் செம்படவர்கள் பாடிய காதல் பாடல்களில் ஆயர்குல மக்களின் குரவைக் கூத்து போன்ற நாட்டுப் பாடல் வடிவங்களைக் காண முடிகிறது என டாக்டர் மு.வ. குறிப்பிடுகிறார்.  தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து பசி்க்கு எதிரான புரட்சி நடத்திய மனிதநேயக் காப்பியம் மணிமேகலை தோன்றியது.  சுவை மற்றும் மெய்யுணர்வோடு இக் காப்பியங்கள் அமைந்தன.
    வட மொழியின் மகா காவியங்களான இரகுவம்சம்,  குமார சம்பவம், சிசுபாலவதம், கிரதார்ஜீனியம் நைஷதீயசரிதம் எனும் பஞ்ச காவிய மரபினை அடியொற்றித் தமிழ்க்காப்பியங்கள் ஐந்து எனும் வகைமைக்குள் கொண்டுவரப்பட்டன.  சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி எனும் ஐந்து காப்பியங்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று அழைக்கப்பட்டன.
    பண்டைய இலக்கியங்களில் ஐம்பெரும் காப்பியம் என்ற தொடர் இடம் பெறவில்லை. மயிலை நாதரே இத்தொடரை முதலில் பயன்படுத்தினார்.  அவரும் அவ்வைந்தும் எவை என விளக்கவில்லை.  பின்னர் வந்த தமிழ்விடு தூது எனும் இலக்கியம், கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம் என்று குறித்தது, ஆனால் பட்டியல் இடம் பெறவில்லை.  19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கந்தப்ப தேசிகரே இன்று நாம் வழங்கும் பட்டியலைப் பாடலாய்த் தந்தார்.
    தமிழண்ணல் சிலம்பு, மணிமேகலை, பெருங்கதை எனும் மூன்று காவியங்களையும் அகவற் காப்பியமாகக், காண்கிறார்.  இம் மூன்றுடன் சிவகசிந்தாமணி சூளாமணியைச் சேர்த்து முதல் ஐந்து காப்பியங்கள் என வகைமைப்படுத்தினார்.
    உதயணகுமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியன ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்பட்டன.  பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், புலவர் குழந்தை போன்றோரால் காப்பிய இலக்கியம் புதுமை பூண்டு வாலியின் அவாதார புருஷனாய் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கள்ளிக் காட்டு இதிகாசம் எனும் இரட்டைக் காப்பியமாய் வளர்ந்து நிற்கிறது.
உலகக் காப்பியங்கள் - ஓர் அறிமுகம்
    கதையை வேராகக் கொண்ட காப்பிய வகையை உலக மொழிகளில் உருவாக்கிய கிளை பரப்பியதை டாக்டர் இரா. காசிராசனின் உலகக் காப்பியங்கள் நூல் மூலம் தெளிவாக உணர முடிகிறது.
1.    கிரேக்கக் காப்பியங்கள்
    ஹோமரின் இலியட்ஒடிசி எனும் காப்பியங்கள் இம்மொழிசார்ந்தன.  டிராய் நகர யுத்தம் தொடர்பான காப்பியங்கள் தோன்றிய சைபீரியா எத்தியோப்பியா இலியன் பொசீஸ் நோஸ்டாய், டெலிகோனியா ஆகியன புகழ்மிக்கன.
2.    கிப்ருமொழிக்காப்பியங்கள்
    மனித ஆத்மாவின் போராட்டங்களை எடுத்துரைக்கும் யோபு தொன்மம் நிறைந்த காப்பியம்
3.    லத்தீன் மொழிக் காப்பியங்கள்
    ரோமன் நாட்டு மொழியான லத்தீனில் வெர்ஜிலின் ஏனியட் தோன்றியது.  சிலியஸ் இத்தாலிகஸின் பியூனிகர் எனும் காப்பியம் அக்கால சில் காப்பியம், ஏனியட் காப்பியம் ஆகியன லத்தீன் மொழியில் அமைந்த காப்பியங்கள்.
4.    ஆங்கிலக் காப்பியங்கள்
    மில்டனின் பாரடைஸ் லாஸ்ட், கீட்சின் காப்பியமான எண்டிமியன் மனக்கிளர்ச்சியஊட்டும் வகையில் எழுதப்பெற்ற பீவுல்ப், காப்பியம், காவர்டு பைல் எழுதிய ராபின்குட் உரைநடைக் காப்பியம் ஆகியன குறிப்பிடத்தக்க ஆங்கிலக் காப்பியங்கள்.
5.    அரேபியக் காப்பியங்கள்
    அபுல் காசின் மான்சர் இயற்றிய ஷா நமி எனும் பாரசிகக் காப்பியம், 1001 இரவுகள் கதை ஆகியன குறிப்பிடத்தக்கன.
6.    ஜெர்மன் காப்பியங்கள்
    ஜெர்மன் மொழியில் அமைந்த நிபிலங்கன்லைட் காப்பியம் புகழ்மிக்கது.
7.    பிரஞ்சு மொழிக் காப்பியங்கள்
    ரோலன்டின் பாடல் எனும் பிரஞ்சுமொழிக் காப்பியம் வீரயுக யாப்பமைப்பு கொண்டது.
8.    இத்தாலி மொழிக் காப்பியம்
    இத்தாலி மொழியிலமைந்த அரியஸ்டோவின் ஆர்லண்டோ பியூரியசோ, சிலுவைப் போர் பற்றி விளக்குகிறது.  மரினசின் அடோன் கீயூராவின் ரிச்சியலார்டிட்டேவும்  குறிப்பிடத்தக்கன.
    உலகக் காப்பியங்களில் ஒரு சில மட்டுமே இங்குக் குறிப்பிடப்பட்டது.  விரித்துரைத்தால் பட்டியல் நீளும்.
உலகக் காப்பியங்களுக்கு நிகரான தமிழ்க் காப்பியங்கள்
1.    வரபலம் பெற்றவர்கள் தமிழ்க் காப்பியத்தலைவன் தலைவியாகக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வத்தின் வரத்தைப் பெற்று நினைத்தவுடன் தன் வடிவம் மாற்றக் கூடிய சக்தி பெற்றவளாகச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்துள்ளார்.  கில்கெமிஷ் காப்பியத்தில் கதைத் தலைவன் கில்கெமிஷ் அனுபெல், இயா ஆகிய கடவுளரிடமிருந்து வரம் பெற்றவனாக அமைகிறான்  மகாபாரதத்தில் வரம் பெற்றவனாக அமைகிறான்.  சூரியனின் மகனாகக் காட்டுகிறார் அதே போல் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய கில் கெமிஷ் காப்பியத்தலைவனும் சூரியபகவான் ஷாமாவின் மகனாகப் படைக்கப்பட்டார்.
2.    ஆங்கிலக் காப்பியமான ஆர்தர் சீவகசிந்தாமணி காப்பியக் கதையோடு ஒத்துப் போகிறது.  தன் திறனைக் காட்டிச் சீவகன் எட்டுப் பெண்களை மணந்ததாக அக் கதை கூறுகிறது.  சிறந்த முறையில் போர் வீரனாய்த் திகழ்ந்த ஆர்தர் காயம் படுகிறான் அவனது வீரத்தைக் கனீவர் என்பாள் விரும்புகிறாள் காதலாக மாறுகிறது.  அவள் தந்தையிடம் ஆர்தர் தோட்டக் காரனாகப் பணிக்குச் சேருகிறான்.  பக்கத்து மன்னன் கனீவரை விரும்பி மணக்க நினைக்க ஆர்தர் வெள்ளைக் குதிரையேறி அவனைத் தோற்கடித்தான் என்று கதை நடைபெறுகிறது.
3.    நாககுமாரகாவியம் போன்றே பாரசிக மொழியில் பாம்பு சுற்றிய பாம்பரசன் சோகாக் அரசன் கதை கூறும் ஷா நமி கதையைக் கதையைக் கூற முடியும்.
4.    எபிரேய எழுத்தாளர்கள் விவிலியக்கதைகளைக் காப்பியமாக்கியது போன்று தமிழில் வீரமாமுனிவர் இயேசு நாதரின் வளர்ப்புத்
தந்தை ஜோசப்பின் கதையைத் தேம்பாவணியாக்கினார். ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை இரட்சண்ய யாத்திரிகம் படைத்தார்.
5.    அரேபியாவில் நடந்த இப்ராஹிம் (நபி) அவர்களின் வரலாற்றை ஆபிரகாம் வரலாறாக விவிலியத்தில் காணமுடிகிறது.  தன் அன்பு மகன் சீராளனை அரிந்த பிள்ளைக் கறி தந்த கதையாகச் சிறுத்தொண்டரின் வாழ்வியல் கதையைப் பெரியபுராணம் அமைகிறது.
உலகக் காப்பியங்களுடன் தமிழ்க் காப்பியங்கள் ஒற்றுமை
1.    ஏதாவது ஒரு சமயக் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் கதை அமைக்கப் பட்டுள்ளது.
2.    ஒரு சிக்கல் ஏற்படும் அச் சிக்கலால் பலர் பாதிக்கப்படுவர்.  அச்சிக்கலை மித மிஞ்சிய வலிமை பெற்ற தன்னிகரற்ற தலைவன் தீர்த்து வைப்பான்.
3.    அநீதி தோற்று நீதி வெல்லும்
4.    ஆற்றல் சார் தேவதைகளும் வான தூதுவர்களும் கதையில் வருவர்.
5.    நிறைய கிளைக்கதைகள் காப்பியத்திற்கு அணி சேர்க்கும்.
6.    நிறைய தொன்மங்கள் விடையளிக்க இயலா வினாக்கள் இடம் பெறும்.
7.    இயற்கை சார்ந்த வருணனைகள் மிகுந்து காணப்படும்.
8.    பாத்திரப் படைப்புக்கள் நாடு பல தாண்டியும் ஒத்த தன்மையோடிருக்கும்.
9.    மொழிதான் வேறு, கருத்தும் கதையும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும்
ஆய்வு முடிவுரை
    உலகின் உயர்தனிச் செம்மொழியாய் தமிழ் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழை உலகின் மற்ற மொழி இலக்கியங்களோடு கொண்டு சேர்ப்பது நம்கடமை.  தண்டியாசிரியரின் காப்பியவரையறை முற்றிலும் மாறி மண்சார்ந்த உறவுகள், பண்பாட்டுப் பதிவுகள், கருவாச்சியாக,  கள்ளிக் காட்டு இதிகாசமாகப் பதிவு செய்யப்பட்டு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் படவும் செய்கிறது.
    தாகூரின் கீதாஞ்சலி மொழி பெயர்க்கப்பட்டு உலகின் பார்வைக்குப் போனதால் அவரால் நோபல் பரிசு பெற முடிந்தது.  தாகூருக்கு நிகரான கவியாற்றல் பாரதிக்கு இருந்தும் அவரது கவிதைகள் உலகத்தின் பார்வைக்கு மொழி பெயர்க்கப்படாததால் அச்சமயத்தில் அச்சிறப்பைப் பெறமுடியவில்லை.  தமிழ்க்காப்பியங்களை உடனடியாக மொழிபெயர்த்து உலகின் பார்வைக்குக் கொண்டு சென்றால் இன்றும் ஒப்பீட்டு ஆய்வுக்குச் சிறப்பாக நடைபெறலாம்.

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக் கட்டுரை, காப்பியக் கனிகள் ஆய்வுக்கோவை, பக்கம். 210 – 216.

No comments:

Post a Comment