Thursday, 21 July 2011

                                        எதிர்காலத் தமிழ் எவ்வாறு அமையும்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வு முன்னுரை
    மாற்றமடையாத எதுவும் இந்த உலகில் தப்பிப்பிழைப்பது இல்லை.  ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தமிழ்மொழியிலும், தமிழிலக்கியத்திலும், எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் என்பதை முன்னிறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
எழுத்துச் சீர்திருத்தம்
    26 எழுத்துகளைக் கொண்டு எளிமையாய் அமையும் ஆங்கிலமொழி போல், தமிழ் எழுத்துகள் சீர்த்திருத்தப்பட்டு தமிழின் வரிவடிவம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.  “இன்று 247 தமிழ் எழுத்துகளையும் கணினிப் பயன்பாட்டில் 107 குறியீடுகளைக் கொண்டு எழுதுகிறோம்“.  என மலைக்கிறார் அறிவியல் தமிழ் அறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி.  தமிழைத் தாய்மொழியாய் கொண்டிராத பிற நாட்டவரும் எளிமையாய் தமிழ் படிக்க எதிர்கால எழுத்துச் சீர்திருத்தம் அமையும்.  கணினியை இன்னும் எளிமையாகப் பயன்படுத்த வாய்ப்பாக அமையும்.  
பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள்
    இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்ற அளவுக்கு, வட்டாரப்பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள் நடைபெறவில்லை.  திருநெல்வேலித் தமிழுக்கும், சென்னைத் தமிழுக்குமான ஒப்பியல் ஆய்வுகள், வட்டார வழக்குச் சொல்லகராதி தொடர்பான ஆய்வுகள் தமிழகத்திற்குள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு இணையத்தில் அந்தந்த மக்களின் குரலில் பதிவாக்கப்படவேண்டும்.
கல்வெட்டுப்பதிவுகள் இணையத்தில் ஆவணமாக்கப்பட வேண்டும்
    ஆய்வறிஞர் திரு. ஐராவதம் திரு. மகாதேவன், நாகசாமி போன்றோரின் கல்வெட்டாய்வுகளைப் போன்று பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரிய கல்வெட்டுகளைப் படங்களாக எடுத்து, இணையத்தில் ஆவணமாக்கினால் உலகளாவிய அளவில் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.  “2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய கல்வெட்டுகள் இந்தியாவில் உள்ளன.  அதில் 90% தமிழ்நாட்டில் உள்ளன.  திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலையில் அதிக செய்திகளைக் கூறும் கல்வெட்டு உள்ளது.
நாடு முழுக்கத்தமிழ்க் கல்வி
பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் 2001 – 2002 அறிக்கைப்படி இந்தியாவில் 213 பல்கலைக்கழகங்களும் 16,000 கல்லூரிகளும் உள்ளன.  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழியற் புலங்கள் உருவாக்கப்பட்டு கற்பித்தலும் ஆய்வுகளும் நடைபெற வேண்டும்.
திருக்குறள் உலக இலக்கியமாய் அறிவிக்கப்பட வேண்டும்
    உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக இலக்கியமாய் ஐ.நா. சபை மூலம் அறிவிக்க வைப்பதும், உலகின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் திருக்குறளைக் கொண்டு செல்ல வேண்டும்.
கணினித்தமிழ் – இணையத்தமிழ்
    தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும்.  தமிழ் இணையப் பல்கலைக்கழகம் www.tamilvu.org.’ எனும் வலைத்தள முகவரியில் இட்டு, அழகான மின்நூலகத்தை அமைத்து, இணையக் கல்வியை 54 நாடுகளிலுள்ள 5000 தமிழ் மாணவர்களுக்கு அளித்து வருகிறது.  இணையத்தமிழை முதுநிலைப் பாடமாக்கி, கணினியோடு இணைந்தகல்வி உருவாக்கப்பட வேண்டும்.    
டிஸ்கி, டாப், டாம், யூனிகோடு எனும் நால்வகை எழுத்துருவாக்கத்தினை உலகத்தமிழர்கள் கணினியில் பயன்படுத்துகின்றனர்.  ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்துருவாக்கத்தினைப் பயன்படுத்துவதால், சில இணையப் பக்கங்களை நம்மால் வாசிக்க முடியாமல் போகிறது.  உலகம் முழுக்க “யூனிகோடு“ முறையைத்தான் மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.  தமிழ்க்கணினிகள் யாவற்றிலும் விதவிதமான உள்ளிடல்கள் நிறுத்தப்பட்டு, எதிர்காலத்தில் ஒரேமாதிரியான உள்ளிடல்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.  “எந்த எழுத்துரு இருந்தாலும் யூனிகோடுக்கு அதை மாற்றும் எந்திரம் கண்டறியப்பட வேண்டும்“ என்ற அறிவியல் தமிழறிஞர் சுஜாதாவின் கருத்து நோக்கத்துக்கது.  அதோடு அவர் கூறும் மற்றொரு கருத்து “இணையத்தில் கோப்புகளை அனுப்ப இன்று 26 முறைகள் உள்ளன.  4 விசைப்பலகை ஒதுக்கீடு உள்ளன.  ஒரே ஒரு விசைப்பலகை ஒதுக்கீடு, ஒரே ஒரு குறியீடு என்பது எதிர்காலத்தில் பாமர மக்களுக்கும் கொண்டு செல்ல உதவும்“ என்பதாக அமைகிறது.
புதிய நோக்கில் தமிழ் ஆய்வுகள்
    உலகில் தமிழியற்புலங்கள் உள்ள அனைத்துப்பல்கலைக்கழக நூலகங்களும் இணையம் வழியே தொடர் இணைவு செய்யப்பட்டால், “மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் சிறப்பாக நடைபெறும்.  அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வு நூலடைவுகளும் இணையத்தில் இடப்படுவதன் மூலம், திரும்பத் திரும்ப ஒரே துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறையும்.  லெமூரியாக்கண்டம், பூம்புகார் ஆகியன கொற்கை தொடர்பான கள ஆய்வுகள் ஊக்குவிக்கப்படுட வேண்டும்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கியம் பயிலலாம்
    தமிழ் இலக்கியப் படைப்புக்களின் நோக்கும் போக்கும் எதிர்காலத்தில் மாற்றம் பெறும்.  இயந்திர யுகத்தில் கவிதை, சிறுகதை, உரை நடை இன்னும் சொற்சுருக்கம் பெறும்; மண்மரபு சார்ந்த பதிவுகள், ஏழைமக்களின் அவலங்களே இனி கவிதை முழுக்க இடம் பிடிக்கும்.  நவீன இரட்டைக்காப்பியங்களாய் வைரமுத்துவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கருவாச்சி காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமுமே இதற்குச் சாட்சி, தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் பார்வைக்குள்ளாகி நோபல் பரிசுகளும் பெறவாய்ப்பாகும்.  சிறுகதைகளின் வடிவம் இன்னும் சுருங்கும்.  புதிய பாடுபொருட்களால் நாளைய இளம் படைப்பாளிகள் புதுமைப்பித்தனையும், கு.ப. ரர்வையும், மௌனியையும், சரியாக உள்வாங்க தாண்ட முயல்வார்கள்  தமிழ் வகுப்பறைகளில் மாணவர்களே, படைப்பாளிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்வார்கள்.  தமிழ்மொழி, ஆய்வகங்கள் மூலம் இன்னும் நவீன உத்திகளோடு ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும் கற்றுத்தரப்படும்.  சிலப்பதிகாரம் இசைப்பண்ணாகவே மாற்றப்பட்டு இசை நுணுக்கங்களோடு கற்றுத்தரப்படலாம். விரிவுரைகளும் அருஞ்சொற்பொருள் விளக்கங்களும் பொருளற்றுப் போகலாம்.  சங்கஇலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அனைத்து இலக்கிய வகைமையும் மறுவாசிப்பிற்குள்ளாகி இன்னும் ஆழமாகப் புரியப்படலாம்.  தமிழ்த்துறை – வணிகம், பொருளாதாரம், மானுடவியல், இயற்பியல், புவியியல், வானியல், மண்ணியல் போன்ற பல்துறைகளோடு இணைந்த பல்துறையாக மாறி அதிலிருந்து புதிய துறைகள் உருவாகலாம்.  உ.வே.சா. அழிந்து கொண்டிருந்த நூல்களைத் தேடிப்பிடித்து பல ஓலைச்சுவடிகளை ஒப்பு நோக்கிப் பாடபேதம் கண்டு அடிக்குறிப்போடு பல இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டார்.  அதன்பின் சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்தல் குறைந்து போனது.  எதிர்காலத்தில் இந்நிலை மாறவேண்டும்.  ஓலைச்சுவடிகள் யாவற்றையும் “ஸ்கேன்“ செய்து இணையத்தளத்தில் உலகம் முழுக்க உள்ளிடும் பணி நடந்தால் உலகளாவிய முன்முயற்சியாக அது அமையும்.  புதிய இலக்கியங்களின் மூல எழுத்துப்படி ஒவ்வொன்றும் இம்முறையில் ஆவணப்படுத்தப்பட்டால் எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் அமையும்.  படைப்பாளிகளின் வாழ்வியல் பதிவுகள் அவர்கள் வாழும்போதே செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால், அவை அவர்களின் படைப்பில் வெளிப்பட்ட முறையை நம்மால் அறியமுடியும்.  எதிர்காலத்தில் வெளியாகும் அனைத்துப் படைப்புக்களோடும் அந்தப் படைப்பு பிறந்த சூழல் குறித்த “குறுந்தகட்டு ஒலிப்பதிவுடன் இணைந்து வெளியானால் வாசனால் படைப்பை முழுமையாய் உணர முடியும்.  நாளைய பல்கலைக்கழகத்துறைகளில் பேராசிரியர்களோடு படைப்பாளிகளும் இணைந்து பணிபுரிவார்கள்.  கரிசல் காட்டு எழுத்தாளர்
கி. ரா. புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தியதைப் போன்ற சூழல் எங்கும் நிலவும்.
    எதிர்காலம் தமிழின் எழுச்சிக்காலமாய் அமையும்.  சொந்த மண்ணில் அந்நியப்படுத்தப்பட்ட மொழியாக இனி தமிழை யாரும் நினைக்க முடியாது போகும்.  தமிழ் ஆட்சிமொழியாக அனைத்துத்துறைகளிலும் திறம்படச்செயல்படும்.  புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையான தமிழ் உணர்வு தமிழகத்திலும் உருவாகும்.  தமிழ் நவீன ஊடகமான இணையத்திலும் சாதனை படைத்து உலகத்தோரால் பாராட்டப்பெறும்.  பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்படலாம், வேலைவாய்ப்புத் தரும் துறையாக மலரும்.  தொன்மையின் வேரில் தமிழ் எனும் கற்பகதரு நவீன கனிகளைத்தரும்.  மொழிபெயர்ப்புகள் நிறைய நடைபெற்று “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்“. நம் தேர்ந்த பண்பாடும், திராவிட நாகரிகமும் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்று பின்பற்றப்படும்.  தனித்தியங்கும் தன்மை தமிழனுக்கு உண்டு.  தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு என்ற பாவேந்தர் கூற்று அப்போது மெய்ப்பிக்கப்படும்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாய்வு மன்றம் நடத்திய “தமிழாய்வு கடந்த காலமும் வருங்காலமும்“ எனும் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.  ஆய்வுக்கதிர் – 5, மெய்யப்பன் பதிப்பகம், பக்.102-107.

No comments:

Post a Comment