Thursday, 21 July 2011

                                                            தமிழ் இலக்கியம் உணர்த்தும்
                                                           “மண்ணும் மனித உறவுகளும்“

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வு முன்னுரை
    மண் புவியியல் சார்ந்த திடப்பொருள் மட்டுமன்று; மானுடத்தின் ஆத்மா சார்ந்த உயர்திணைப்பொருள். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் மண்ணே மனிதனுக்குள் நிரம்பி வழிகிறது.  “மண்ணைப் பிசைந்து ஆணை உருவாக்கியவன் இறைவன்“ எனச் சமயங்களும் மார்க்கங்களும் மண்ணையே ஆதியாகக் கூறுகின்றன.  “மண்ணிலிருந்து வந்தோம் மண்ணுக்கே செல்கிறோம்“ எனப் பஜகோவிந்தம் உரைக்கிறது.  “கிருஷ்ண பரமாத்மா குழந்தைப் பருவத்தில் வாய் நிறைய மண்ணை உண்டு அதில் உலகத்தையே காட்டினார்“  எனக் கிருஷ்ணலீலாதரங்கிணி பேசுகிறது.
    ஆதி மனிதன் நாகரிக காலத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையத் தொடங்கியபோதும் மண்ணோடு அவன் கொண்ட உறவையும், இயற்கை மீது அவன் கொண்ட ஈடுபாட்டினையும் விட முடியாமல் வாழ்ந்தான்.  பாண்டங்களை உருவாக்கி மண்ணின் மணத்துடனே உணவினை உண்டான்.  அவன் வணங்கிய நாட்டார் தெய்வங்களுக்குப் பெரிய கோவில் இல்லை.  திருக்குட் முழுக்குகள் இல்லை.  கோபுரங்கள் இல்லை; ஆகம விதிகள் இல்லை, அவனைப்போல் அத்தெய்வங்களும் வெகு இயல்பாய் வெட்ட வெளியில் குடியிருந்தன. மண்ணால் செய்யப்பட்ட மண்மாடங்களும் இசக்கியம்மனும், குதிரையோடு அமர்ந்திருந்த அய்யனாரும் அவன் வழிபாட்டுத் தெய்வமாய் மாறினர்.  மண்ணை அவன் உயிரை விட உயர்வாய் மதித்தான்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஏராளமான முதுமக்கள் தாழிகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்திய மம்மிகளுக்கு இணையான, அடக்க முறையைத் தமிழன் பெற்றிருந்தான் எனச் சான்றுரைக்கிறது.  பஞ்ச பூதங்களின் அரசியாகத் திகழ்ந்த மண், தமிழனின் பண்பாட்டோடு ஒன்றிப் போனதை நம்மால் அறிய முடிகிறது.  சங்கரன்கோவில் கோமதியம்பாள் கோவில் புற்றுமண் இன்றும் நோய் நீக்கும் மருந்துப்பொருளாக மக்களால் மதிக்கப்படுவதைக் காண்கிறோம்.  மண்சுவர்கள் எழுப்பி, மண்ணில் தளம் போட்டு, சாணி மெழுகி, மண்ணின் விளை பொருள் ஓலைக்கிடுகினை மேலே பரப்பி தமிழன் “மண்வாழ்வு“ நடத்தி இருக்கிறான் என்பதை இலக்கியச் சான்றுகளுடன் விளக்க முயல்வதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.    தமிழரின் வாழ்வியலில் மண், தெய்வநிலையில் வழிபாட்டுக்குரிய பொருளாய் அமைகிறது.  பூமியைத் தாங்குகிற மண்மாதா பூமா தேவியாக வழிபடப்பெறுகிறாள்.  தமிழகக் கிராமங்களில் இன்றும் விவசாயிகள் வயல்பரப்பில் செருப்புக்காலோடு நடப்பதில்லை.  விதைக்கும் போதும் அறுவடையின் போதும் தமக்குச் சோறிடும் நில மக்களுக்குப் படையலிட்டுப் பூசை செய்கிறார்கள்.
2.    கிளியாஞ்சட்டி எனும் மண்அகல் விளக்குகளைத் தெய்வங்களுக்கு ஏற்றி வைத்துவேண்டுதல்வைக்கும் பழக்கமும், மண்சட்டியில் தீக்கங்குகள் போட்டு “அடவு எடுத்து“ வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
3.    இறப்புச் சடங்கில் சிதைக்குத் தீமூட்டப்படும் முன்னர் பிணத்தின் மேல் வைக்கோலைப் பரப்பி மண்ணைக் குழைத்துப் பூசும் பழக்கம் இன்றும் உண்டு.
4.    ஆடி பதினெட்டில் நல்ல இல்வாழ்க்கைக்காகக் கன்னிப்பெண்களும், திருமணமான பெண்களும் மண் அகல் விளக்கேற்றிக் காவேரி, தாமிரபரணி போன்ற நதிகளில் மிதிக்கவிடுதல் காலம் காலமாக நடைபெறுகிறது.
5.    வீடுகட்ட வானம் தோண்டும் முன் “நாள் செய்தல் (அ) வாஸ்து செய்தல்“ எனும் நிகழ்வால் நிலமகளிடம் உத்தரவு கேட்கும் பழக்கம் இன்றும் உள்ளது.  மரத்தை வெட்டி, நிலை, கதவு செய்ததால் மரம் சினமடையாமல் இருக்கவும், அம்மரத்தோடு வீட்டிற்குள் நுழைந்து விட்ட துர்ஆவிகளைவிரட்டவும் அதைச் செய்த தச்சரைக் கொண்டே “புதுமனைப் புகுவிழாவுக்கு“ முந்தைய நாள் சேவலை அறுத்துத் தச்சுக் கழித்தல் நடைபெறுவதையும் காண்கிறோம்.
மண்ணும் பெண்ணும்
    மண்ணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதைத் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகிறது. பெண் சந்ததியைத் தன் கருப்பையில் தாங்கி உருவாக்குகிறாள்.  மண் யாவற்றையும் தாங்கி உணவை உற்பத்தி செய்கிறது.  “போகம்“ எனும் சொல்லை இரு பிரிவிலும் பயன்படுத்துவதைக் காண்கிறோம் கிராமியப் பழமொழிகள் இரண்டினையும் இணைத்தே பார்க்கின்றன.
    மண்ணுக்குப் பூசிப்பாரு, பெண்ணுக்குப் பூட்டிப்பாரு“
    “மண்இட மண்இட வீட்டிற்கு அழகு,
    பொன் இடப்பொன்இட பெண்ணிற்கு அழகு
பட்டினத்தாரும் இரண்டையும் ஒப்புமைப்படுத்தியே பார்க்கிறார்.
   பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
    சொன்னாசை யென்றறிந்து சோராதே“

    நதிகளுக்கெல்லாம் பெண்களின் பெயரை வைத்த தமிழ்ச் சமூகம், நாட்டினைத் தாய்நாடு என வரையறுத்த தமிழ்ச்சமூகம், மண்ணை உயர்திணையாக்கிப் பெண்ணாகப் பார்த்ததைக் காண முடிகிறது.

தமிழ் இலக்கியத்தில் மண்ணும் மனித உறவுகளும்
குறுந்தொகையில் கலந்த தன்மை காதலால் கருத்தொருமிக்கின்றனர் அக்காதலர்களே, நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இன்று முதல் நீ வேறா நான் வேறோ? எனக் கலந்த தன்மையைக் குறுந்தொகை செம்மண்ணையும் மழைநீரையும் கொண்டே விளக்குகிறது.
    “யாயும் ஞாயும் யாராகியோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்?
    யானும் நீயும் எவ்வழி அறிதும்?
    செம்புலப் பெயல் நீர் போல்
    அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே“ (குறுந்தொகை. 40)
இருமணம் கலந்து நறுமணம் வீசும் இனிய சங்கமத்தைக் கூற மண்ணையும் மழையையும் வைத்தே சங்க இலக்கியம் விளக்கியது.
நற்றிணையில் நாணம்
    சிறுவயதில் வெண்மணலை அழுத்திப் புன்னை விதையைப் புதைத்து விளையாட, மறந்துபோய் அதை எடுக்காமல் விட, வளர்ந்து புன்னை மரமாய் நின்றது.  நெய்யும் பாலும் விட்டு அதை வளர்த்ததால் “இம்மரம் உன்னை விடச் சிறந்த உன் தமக்கை“ என்று கூறி வளர்ந்தனர்.  எனவே தமக்கை அருகில் காதல் பேச வேண்டாம் என்பதை
    “விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி,
    மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
    நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
    அன்னை கூறினள், புன்னையது சிறப்பே
    அம்ம நாணுதும், நும்மொடு நகையே“ (நற்றிணை. 172)
மரத்தை உடன்பிறப்பாகக் கண்ட சமூகம் தமிழ்ச் சமூகம் என நற்றிணை காட்டுகிறது.
திருமந்திரம் உணர்த்தும் பக்திச் சிறப்பு
    ஆறு கொண்டு வந்து குவிக்கும் ஆற்று மணலை ஆறு சுமக்காமல் வெள்ளத்தால் கொண்டு செல்லும்.  மேடு பள்ளமாகும்;  பள்ளம் மேடாகும்.  இயல்பாக மணல் செல்வதுபோல், முன்வினைப்படி எல்லாம் நடைபெறும் என்பதைத் திருமந்திரம்
    “ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
    கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
    நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
    பேறிட்டு என் உள்ளம் பிரியகில் லாவே
(திருமந்திரம். 2805)
உயிரிய வாழ்வியல் கருத்தைப் புலப்படுத்தத் திருமூலர் மணல் உவமையைக் கையாள்கிறார்.  இயேசுநாதர் மலைப்பொழிவில் மிக எளிய உவமைகளை, உவமைக் கதைகளைக் கையாண்டு மிகச்சுலபமாக வெளிப்படுத்தியதைப் போல இம்மணல் உவமை அமைகிறது.
திருக்குறள் காட்டும் பொறுமை நிலம்
    இருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி சாதாரண கதலித் தண்டினை வெட்ட முடியாமல் நாணும்.  முரண் சிலநேரங்களில் வாழ்க்கையாகிறது.  மரம் தன்னை வெட்ட வருபவனுக்கும் நிழல் தருகிறது.  அவனது கயிற்றினைத் தாங்கக் கிளைதருகிறது.  தன்னைக் கொல்ல வந்த முத்தநாதனுக்கும் தத்தனை வைத்துப்பாதுகாப்புத் தரச் சொன்ன உயரிய மனிதர்கள் வாழ்ந்த தமிழகத்தில் வள்ளுவர் பொறுமைக்குச் சான்றாக நிலத்தை முன் வைக்கிறார்.
    “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை“    (குறள். 151)
நாடு வளர நல்வாழ்த்துரைக்கும் ஔவை
    ஔவையார் அரசன் உயர வழிசொல்கிறார்.   வரப்பு உயர்ந்தால் யாவும் உயரும் எனப் பொருளாதாரத்திற்கே அடிப்படை நிலம்தான் எனக்கூறும் ஔவை.
    “வரப்பு உயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்.
    நெல் உயரக் குடி உயரும்.
    குடியுயரக் கோல் உயரும்
    கோல் உயரக் கோன் உயரும்!
    கற்ற கல்வியைப் பற்றிக் கூறிய ஔவை அதையும் மண்ணுடன் ஒப்பிடுகிறார்.  “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு“ என்கிறார்.
திரைப்படப் பாடலில் “மண்“ பற்றிய கருத்தாக்கம்
    மாடு கட்டிப் போராடித்தால் மாளாது என்று சொல்லி ஆனை கட்டிப் போராடித்த தஞ்சையின் மண் எடுத்துத் தயாராகிறது பொம்மை செய்து முடித்த உடன் பொம்மை உண்மையாகிறது.
    “தஞ்சாவூர் மண்ணு எடுத்து
    தாமிரபரணி தண்ணியை விட்டுச்
    சேர்த்துச் சேர்த்துச் செஞ்சது இந்தப் பொம்மை – இது
    பொம்மையில்ல பொம்மையில்லை உண்மை
                        (பொற்காலம் – வைரமுத்து)
கல்யாண்ஜியின் கருத்தாக்கம்
    தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவரும், இயற்கை மீது அளவு கடந்த ஈடுபாடு கொண்டவருமான கல்யாண்ஜி, அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ எனும் கவிதை நூலிக்குத் தந்துள்ள அணிந்துரை, சுற்றுச்சூழல் சிந்தனையை மையமிட்டது.  தாமிரபரணியின் நீண்ட ஒட்டத்தைக் கண்டவர், பாக்கெட் தண்ணீர் விற்கப்படுவதைக் கண்டு அதிர்கிறார்.  “கைக்குழந்தைக்குப் பாக்கெட் தண்ணீர் வளர்ந்த குழந்தைகளுக்குச் சோயாபானங்கள் வளர்ந்து கெட்டவர்களுக்கு உறிஞ்சு குழல்களுடன் கருப்புத் திரவங்கள், ரயில்வே கேட்கள் அடைக்கப் படுவதற்காகச் சமயநல்லூர் மருத மரக்கிளைகளில் தாம்புக் கயிற்றில் தொங்கிக் காத்துக் கிடக்கும் சோழவந்தான் தென்னங்குலைகள்“
            (கல்யாண்ஜி “நிலா பார்த்தல்“ கவிதைத் தொகுதி, ப.59)
எதிர்வீட்டுக்காரரைக் கூட ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்க்க முடிகிறது... ஆனால்... கவிதை எழுதுகிறார் கல்யாண்ஜி.
    “அடிக்கடிப் பார்க்க முடிகிறது
    யானையைக் கூட
    மாதக் கணக்காயிற்று
    மண்புழுவைப் பார்த்து“    (கல்யாண்ஜி கவிதை, ப.123)
மண்புழு பார்வைக்கு அப்பால் போனது வருத்தத்திற்குரிய நிகழ்வே.  மரங்கள் வெட்டுதலைப் பற்றிக் கனமான சிறுகதைகள் எழுதி உள்ளார்.  அவரது கவிதை...
    “பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்   
    மொர மொரவென
    மரங்கள் எங்கோசரிய“    (கல்யாண்ஜி கவிதை, ப.38)
ஆய்வு முடிவுரை   
    லாரி லாரியாக மணல் வந்து கொண்டே இருக்கிறது.  நம் இல்லக் கட்டுமானங்களுக்கு, கதவாக, நிலையாக மரங்கள் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன.  தொட்டணைத்து ஊறுகிறது நம் இல்ல போர்வெல் குழிகள்.  நம் நுரையீரலுக்குத் தேவையானமட்டும் ஆக்சிஜனைத் தந்து கொண்டே இருக்கின்றன நம் சுற்றுப்புற மரங்கள்.  நம் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன வயற்காட்டு நெற்பயிர்கள்.  நம் மானத்தை மறைத்துக் கொண்டே இருக்கின்றன.  கரிசல் காட்டு பருத்தி விளைச்சல்கள், அறுபது ஆண்டுகளுக்கு முன் நம் தாத்தா நட்டு வைத்த வேப்பமரத்தின் நிழல் இதமாக இருக்கிறது நமக்கு.  பதிலுக்கு நாம் செய்யும் கைம்மாறு என்ன?  கான்கிரிட் கல்லறைகளில் மண்மாதாவைப் போர்த்தினோம் மரங்களை வெட்டி நிலங்களைப் பாழ்படுத்துகிறோம்... விளைவு
    “பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
    குமரி கோடுங் கொடுங்கடல் கொள்ள“    (சிலப்பதிகாரம்)
1.    கடல்கோளால் குமரி மலையும், பஃறுளி ஆறும் அழிந்தது போல் இந்தப் பூமி அழிவதற்குள் மண் – மனித உறவுகள் மறுபடியும் ஏற்பட்டாக வேண்டும்.
2.    இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு ஏற்பட மாதம் ஒரு மரக்கன்று நட வேண்டும்.
தமிழிலக்கியம் நமக்குக் கற்றுந்தந்த பாடம்,
    அன்பாய் இருக்கும் அஃறிணைகள் மீது
    நாமும் அன்பாய் இருப்போம்“ என்பதுதான்.

No comments:

Post a Comment