குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்திகள்
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
ஆய்வு முன்னுரை
காலம் மாற மாற மனிதமனம் முதல் இலக்கிய வடிவம் வரை யாவுமே கொஞ்சம் கொஞ்சமாகச் சுருக்கி வரக் காண்கிறோம். நீண்ட நெடிய கதைகளைச் செய்யுளில் கூறிய காப்பிய மரபுகள் மறைந்து, ஒரு பக்கச் சிறுகதைகளாக உருவெடுத்து நிற்பதைக் காண முடிகிறது. பக்கம் பக்கமாய் எழுதப்பட்ட நீள் கவிதைகள், ஐந்துவரி ஐக்கூக் கவிதைகளாய் ஜென் சாயலோடு மாறி வருவதைக் காண முடிகிறது. “சுருங்கக்கூறி விளங்க வைத்தல்“ எனும் உத்தியினைக் கையாண்டு திருக்குறளும், ஆத்திசூடியும், நாலடியாரும், இன்னபிற நீதி நூல் இலக்கியங்களும் வெற்றி கண்டன. எட்டுத்தொகை நூல்களிலேயே மிகக்குறைந்த அடிகளைக் கொண்ட குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்தியினைச் சான்றுகளுடன் நிறுவ முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குறுந்தொகை – ஓர் அறிமுகம்
எட்டுத்தொகை நூல்களில் “நல்“ என்ற அடைமொழியைப் பெற்ற ஒரே நூல் குறுந்தொகையே ஆகும். நான்கு அடிச் சிற்றெல்லை, எட்டடிப் பேரெல்லை உடையதாக இந்நூலின் பாடல்கள் அமைந்துள்ளன. “வளையுடைத் தனையதாகி“ எனத் தொடங்கும் 307 ஆவது பாடலும், “உவரியொருத்த“ எனத் தொடங்கும் 391 ஆவது பாடலுமே பொதுத் தன்மையை விட்டு விலகி ஒன்பது அடிகளில் அமைகிறது. குறுந்தொகை நானூறு எனப் புகழ் பெற்றாலும் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை உடையதாக இவ்விலக்கியம் அமைகிறது. 201 புலவர்கள் பாடியிருக்க இந்நூலைப் பூரிக்கோ தொகுத்தார். 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், எஞ்சிய 20 பாடல்களுக்கு நச்சினார்கினியரும் உரை வகுத்தனர். உவே. சாமிநாதையர் 1927 இல் வெளியிட்ட ஆய்வுப் பதிப்புச் சிறப்பாக அமைந்துள்ளது.
வெளிப்பாட்டு உத்தி
படைப்பாளி தாம் சொல்லவந்த செய்தியை அல்லது கருத்தை வாசகனிடம் சரியாக உணர்ச்சியோடு கொண்டு செல்லப் பயன்படுத்தும் உத்தியே வெளிப்பாட்டு உத்தியாகும். ஓர் இலக்கியத்தின் வெற்றி தோல்விகளுக்கு இதுவே காரணமாக அமைகிறது. அழகான உவமைப் பயன்பாடு, எளிமையான நடை, நுட்பமான பதிவுத்திறம், வேண்டுகோள் அல்லது தடையோடு தொடங்கும் மரபு, உள்ளுறை, அஃறிணை மூலம் உயர்திணையை விளக்கும்பாங்கு ஆகியவற்றைக் குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்தியாகக் கொள்ள முடிகிறது. வாசகரின் மனவோட்டம் அறிந்த தெளிவான இலக்கியமாகவே குறுந்தொகை திகழ்கிறது. வடிவத்தில் குறுகிய குறுந்தொகை உணர்வில் பெருந்தொகையாக, அருந்தொகையாகவே காட்சி அளிக்கிறது.
குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்திகள்
1. மிகக்குறைந்த அடிகளால் விரிவான செய்தியைப் புலப்படுத்தக் குறுந்தொகை முயன்று வெற்றி கண்டுள்ளது.
2. அகச் செய்திகளை வெளிப்படுத்தும் அதே அழகியலால் குறுந்தொகை, புறச்செய்திகளையும் முருகியலோடு வெளிப்படுத்துகிறது. திப்புத்தோளாரின் குறிஞ்சித் திணைப் பாடல் குறுந்தொகையின் முதல் பாடலாய் அமைகிறது.
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே (குறுந். 1)
இப்பாடலில் குருதி சிவப்பு, குருதி வழிந்தோடும் இளம் சிவப்பு, இரத்தம் தோய்ந்த அம்பு சிவப்பு, போரில் பாய்ந்த யானைக் கொம்பு, சிகப்பு, செவ்வேளான் குறிஞ்சிக் கோமான் முருகன் உறையும் அம்மலையின் மலரும் சிகப்பு ஒரே சொல். ஒரு பாடலின் பல்வேறு அடிகளில் முன்னும் பின்னும் சென்று அழகான சொற்சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறது. அகப்பாடல் இன்பம் புறப்பாடலிலும் கிடைக்கிறது.
3. உவமைகளை இடையிடையே பயன்படுத்தி, வாசகனை மயக்க வைக்கும் இரசிக்க வைக்கும் திறனைக் குறுந்தொகைப் பாடல்கள் பெற்றுள்ளன. தொடர்பற்ற இரு உள்ளங்கள் ஒன்றாக இணைவதைச் செம்புலப்பெயல்நீரார் (பாடல். 40)
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
எனக் குறிப்பிடுகிறார்.
தண்ணீருக்கு நிறமில்லை, ஆனால் தண்மை உண்டு. செம்மண் நிலத்துக்கு நிறமுண்டு ஆனால் தண்மை இல்லை. ஒன்றின் தன்மையைப் பிறிதொன்று ஏற்கிறது. இறுதியில் ஒன்றாகக் கலக்கிறது. ஆண் பெண் இணைவினை இதை விட எந்த இலக்கியத்தாலும் எளிமையாக உணர்த்திட இயலாது.
4. நவீன, பின் நவீனத்துவ உலகில் கதைகளின் அமைப்புகள் சிதைக்கப் பட்டாலும் கதைசொல்லுதல் காலங்காலமாய் மீட்டுருவாக்கம் செய்யப்பெறுகிறது. சம்பவம் நடைபெறும் களம், சம்பவம் நடைபெறும் போதுள்ள சூழல், கதைமாந்தர்கூற்று, முரண்கள், அதன் முடிவு என்ற வரையறையில் குறுந்தொகையின் அகப்பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எட்டுவரிக்கதைக்களுக்கான விளக்கத்தை விரிக்க விரிக்க நீண்டு கொண்டே செல்வதைக் காண முடிகிறது.
”இடிக்கும் கேளிர்...” (பாடல். 58) எனும் பாடல் குறுந்தொகையின் சிறுகதைச் சாயல் வெளிப்பாட்டிற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. மலையும் மலைசார்ந்த இடம், ஞாயிறு காய்ந்து கொண்டிருக்கும் உச்சிப் பொழுது, நன்றாக இருந்த தலைமகனிடம் உள்ள, உடல் மாறுபாடுகள், பொறுக்க இயலாமல் கேட்கிறான் பாங்கன், இளம் பெண்ணால் இது ஏற்பட்டது. நான் என்ன செய்ய முடியும்? என இரங்கிப் பேசுகிறான் தலைவன். உடன் பாங்கன் முரண்படுகிறான். இச்சிறு மகளால் உன் பெருமை இழுக்காகிறதே என இடித்துரைக்கிறான், தலைமகன் வெண்ணெய் உவமை மூலம் மறுத்துத் தன் இயலாமையைப் புலப்படுத்துகிறான்.
இடிக்கும் கேளிர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே
எனும் வெள்ளி வீதியாரின் பாடல் சிறுகதை உத்தியே. சூரியன் சுட்டெரிக்கிறான். கையே இல்லாத, வாய்பேச இயலா மனிதனுக்கு எதிரில் தகிக்கும் மலைப் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய்க் கட்டி போல் உருகுவது தெரிகிறது. தடுக்கக் கையில்லை. கத்திக் கூச்சலிட வாயுமில்லை, நவீனக் கதைகளுக்குக் குறுந்தொகை முன்னோடி
5. வாசகனைக் கவர்ந்திழுக்கும் திறன் மிக்கதாய் குறுந்தொகைப் பாடல்கள் அமைகின்றன. தலைவனோடு தலைவி கொண்ட நட்பு மொழி, மனம், மெய் என்ற மூன்றாலும் அளந்து காணற்கு அரிது என்பதை “பெரிது, உயர்ந்தன்று, ஆரளவின்று“ போன்ற சொற்கள் மூலம் வர்ணித்துக் குறுந்தொகை விளக்குகிறது.
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
6. நேரடியாகச் சொன்னதை விடச் சொல்லாமல் சொல்லும் உள்ளுறை உத்தியைக் குறுந்தொகைப் பாடல்களில் ஏராளமாகக் காணலாம். தோழி இரவுக்குறி மறுத்துத் தலைவனிடம் கூறும் “கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றென“. (பாடல். 69) எனத் தொடங்கும் பாடலில், ஆண் குரங்கின் கோரச் சாவு கேட்டு பெண் குரங்கு மலையுச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவத்தை விவரிக்கும் தோழி, “வாரல் வழியோ வருந்தும் யாமே“ என்று முடிக்கிறாள். இதில் சொல்லாமல் விட்ட கருத்து, எம் நாட்டு விலங்குகளே தலைவனுக்கு ஆபத்து என்றால் உயிர் வாழாது, இரவில் கொடுமையான விலங்குகள் நிறைந்த இப்பகுதியில் வரும் போது ஏதேனும் துயரம் நடந்தால் அதன் பின் எம் தலைவியை உயிரோடு பார்க்க இயலாது என்பதுதான். மற்ற எட்டுத்தொகை நூல்களை விடக் குறுந்தொகையில் இவ்வெளிப்பாட்டு உத்தி வெகு இயல்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
7. வெகு இயல்பான பேச்சு நடையில் குறுந்தொகைப் பாடல்கள் பல அமைந்துள்ளன. பரத்தையிற் பிரிவு மேற்கொண்ட தலைவனை நோக்கித் தோழி வாயில் மறுத்த பாடலாய்.
”வாரலெஞ் சேரி தாரனின் றாரே.. (258)”
என்று அமைவதைக் காண முடிகிறது.
8. குறுந்தொகைப் பாடல்கள் வாசகனைச் சரியாய் சென்று சேர்ந்ததன் காரணம், அவற்றின் எளிமையும் இனிமையும் கலந்த தன்மைதான்.
ஆய்வு முடிவுரை
1. அன்பினை வலியுறுத்தும் குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்தி வேறுபாடுடைய தனித்துவம் மிக்க உத்தி. சப்பானிய ஜென் போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடிவத்தைச் சுருக்கும் முயற்சியிலும் தமிழன் வெற்றி பெற்றான் என்பதற்குக் குறுந்தொகையே சான்று.
2. உணர்வு வெளிப்பாட்டினைப் படைப்பாளியிடமிருந்து வாசகனிடம் கொண்டு செல்லும் வெளிப்பாட்டு உத்திகள் பலவற்றைக் குறுந்தொகைப் புலவர்கள் செய்துள்ளார்கள் என்பதற்கு 401 பாடல்களும் 401 சான்றுகளாகத் திகழ்கின்றன.
3. உலகின் எந்த இலக்கியத்தையும் விடத் தமிழ் பல கோடி மடங்கு உயர்வானது, உன்னதமானது என்பதற்குக் குறுந்தொகை மற்றுமொரு சான்று.
4. நவீனப் பார்வையோடு குறுந்தொகையை நாம் மறுவாசிப்பு செய்தால் பல நூறு புதிய வடிவங்களை, புதிய வெளிப்பாட்டு உத்திகளை நம்மால் இனம் காண முடியுமென்பது திண்ணம்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற குறுந்தொகைப் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை – ஆய்வுக்கோவை, பக். 841 – 845.
No comments:
Post a Comment