Thursday, 21 July 2011

                           சங்க இலக்கியமரபில் கவிஞர் இளையபாரதியின் பட்டினப்பாலை, செம்புலப்பெயல் நீர் கவிதைகள் ஓர் ஆய்வு
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.


இளைய பாரதி என்னும் பன்முகப்படைப்பாளி
கவிஞன் கவிஞனாக மட்டுமே வாழவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.  தன் படைப்பின் அடிநாதத்தைக் கவிஞனாகத் திரைப்பட இயக்குநராக, வரலாற்றுக்கே வரைபடம் வரையும் பத்திரிகையாளராக, உ.வே.சா. போன்று அரிய நூல்களைப் பதிப்புச் செய்யும் (பத்திரிகை சார்ந்த) பதிப்பாளனாக, தமிழ்த் தொண்டராகப் பண்முகப் பார்வையோடு தந்துவரும் படைப்பாளியே இளையபாரதி.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலராகப் பணியாற்றிய கவிஞர் இளைய பாரதியின் இயற்பெயர் திரு. சாமிநாதன் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறையைச் சார்ந்த இவர், அசோகமி்த்ரன், விமர்சகர் கா.சிவத்தம்பி போன்றோரால் பெரிதும், பாராட்டப்பெற்ற, கலைஞரின் “தென்பாண்டிச் சிங்கம்“ தொலைக்காட்சித் தொடரை இயக்கியவர்.  கோமல் சுவாமிநாதனுடன் இணைந்து சுபமங்களாவை மிகச்சிறந்த இதழாக்கிக் கலைஞர் முதல் கலாப்ரியா வரை என்ற நேர்காணல் திரட்டைத் தந்தவர்.  புதுமைப்பித்தன் தன் துணைவி கமலாவுக்கு என்ற தலைப்பில் நூலாக்கியவர்.  தமது புதுமைப்பித்தன் பதிப்பகம், சந்தியா பதிப்பகத்தின் சார்பாக வண்ணதாசன், வண்ணநிலவனின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுப்பு மேற்கொண்டு தொகுப்பு நூல் வெளியிட்டவர்.  “மரணத்தின் நட்சத்திரங்கள், பட்டினப்பாலை“ எனும் தமது கவிதை நூல்களால் கவிதை உலகில் பரிமாணங்களைக் கண்டவர்.  அவருடைய கவி ஆளுமையை இக்கட்டுரையின் கரு.
இளைய பாரதியின் கவி ஆளுமை
    தமிழின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபுள்ள சங்க இலக்கியத்தை முறையாக உள்வாங்கி மாற்றுருவாக்கம் செய்த புதுக்கவிஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  மரபை அறியாமலேயே மரபை மீறியதாய் அறை கூவல் விட்ட கவிஞர்களும் உண்டு.  மு.மேத்தா, சிற்பி, அப்துல் ரகுமான் போன்றோரின் கவிதைகள் செழுமை மிக்கதாய் அமைந்ததன் காரணம்.  அவர்கள் சங்க இலக்கியத்தமிழ் மரபை நன்கறிந்து பேராசிரியர்களாய் பாடம் நடத்தியதோடு, புதுக்கவிதை எழுதியவர்கள் என்பதால்தான் ஞானக் கூத்தனின் “அன்று வேறு கிழமை“ இதற்கு மற்றொரு சான்று.  இளைய பாரதியின் “பட்டினப்பாலை“ கவிதை நூல் இம்மரபுக்கு இன்னொரு இனிய சான்று.
    அகமும் புறமும் கலந்த சங்க மரபைப் “பட்டினப்பாலை“ எனும் தமது கவிதைநூலில் இளையபாரதி அழகாகக் கையாள்கிறார்.  அந்நூலை இருகூறுகளாய் வெளியிட்டுள்ள இளையபாரதி, புறம் தொடர்பான கவிதைகளுக்கு முதலிடம் தந்து பட்டினப்பாலை என்ற தலைப்பிலும், காதல் தொடர்பான அகச் செய்தியினை இரண்டாமிடம் தந்து “செம்புலப் பெயல் நீர்“ என்ற தலைப்பிலும் தருகிறார்.
    தான் பிறந்த கிராமம் வைகை அணைக்குள்ளே ஜலசமாதி ஆனபோது கவிதையால் கண்ணீர் வடித்த கவிப்பேரரசு வைரமுத்து மாதிரி, “சாயாவனம்“ எரிந்ததற்காகக் கதறிய சா, கந்தசாமி மாதிரி, கரிகாற் பெருவளத்தாலும் பட்டினத்தடிகளும் தானும் விளையாடிய சோழ நாட்டின் கடற்கரை நகரம் பூம்புகார் காலமாற்றத்தில் வறண்டு போனது கண்டு இளையபாரதி துடித்த துடிப்பே “பட்டினப்பாலை“ இந்நூலின் மனம் உணர்வதை அறிய முடிகிறது.
    வண்ணதாசனுடைய ஆத்மா திருநெல்வேலியிலும் தாமிரபரணியிலும் இருப்பதுமாதிரி, தி. ஜானகிராமனின் படைப்புலக அடிநாதம் காவிரிக் கரையில் இருப்பது மாதிரி, இளையபாரதியின் எழுத்து உயிர்.  “நடந்தாய் வாழி காவேரி! என்று கம்பீரமாய் முன்பு ஓடி பல்வேறு மாற்றங்களால் (சூம்பிப் போய் காவிரிப் பூம்பட்டினப்பாலை” என்கிறார் இளைய பாரதி.
    கவிதை மொழி அக மனத்தின் அபயக்குரலுக்கும், புற உலகின் அபாய நிகழ்வுகளுக்குமிடையே அமையும் டைவெளியே இளைய பாரதியின் கவிதைக் கரு.  மரணம் சார்ந்த கையறுநிலை மொழியே இளையபாரதியின் குழந்தை மொழியில் பிறப்பன அவரது கவிதைகள்.


“கனவு காணும்
குழந்தையின் மொழியில்
எழுது
உன் கவிதையை
அதினிடையே கேட்கும்
கடவுளின் இருதயத்துடிப்பு“
வாழ்வும் சாவும், வாழ்வையும் சாவையும் ஒரே கிண்ணத்தில் அருந்த வேண்டிய எதார்த்தத்தை முரண்பாட்டுக் கவிதையில் காட்டுகிறார் கவிஞர்
இப்படி
தாய் ஊட்டுகிறாள்
ஒரு முலையால் வாழ்வையும்
ஒரு முலையால் சாவையும்“
இக்கவிதை பற்றிக் கூறும் ஞானக்கூத்தன் “கண்ணனுக்குப் பாலூட்டிய பூதகியின் உருவம்தான் தாயின் உருவமா? தாய் சேயை வெளியேற்றுகிறாள். எல்லா வெளியேற்றமும் சாவின் வடிவ வேறுபாடு.  ஒரு பாடத்தின் மீது மற்றொரு பாடம் எழுதப்படுகிறது“ எனக் கூறுகிறார்.
    உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலையின் மீது இன்றைய பட்டினத்தில் பாலைவனமான கொடூரத்தனங்கள் மீண்டும் எழுதப்படுகின்றன.  செம்புலப் பெயல்நீர் மீது இன்றைய காதல் தோல்விகளின் குருதிப் பிழிதல்கள் மீண்டும் எழுதப்படுகின்றன.  பழைய வீடடுக்கு வண்ணம் தீட்டுவது மாதிரி, நேற்றைய பாடல்கள் மீது இன்றைய புதிய சிந்தனைகள் மேலேற்றப்படுகின்றன.  புதுமைப்பித்தன் புராணக் கதையின் மேல் அகலிகையை அமர வைத்துச் சாபவிமோசனம் தந்தது போல, இளையபாரதி இவ்வரிய உத்தியை அழகாகக் கையாளுகிறார்.
    ஒரு கவிதை, வாசகனுக்குள் ஆயிரம் கவிதைகளை எழுத முடியும் என்பதற்கு இக் கவிதை சான்று...

“கங்கையில் மிதக்கும் பிணங்களின்
கண்களைப் பிடுங்கித் தின்று
கொழுத்த மீன்களை
அரிசிப் பொரி போட்டு
அடக்கி வைக்க முடியுமா?”

இதில் இச்சமூகத்தின் எந்தக் கொடூர நிகழ்வுகளையும் பொருத்திப் பார்க்க முடியும்.

மரணத்தை முன்னிறுத்தி...
    இளையபாரதியின் அகமனத்தில் மரணம் வெகுவாகப் பதிந்துள்ளதை வாசகனால் வரிக்கு வரி உணர முடிகிறது.  “சாவிகள் இல்லாதது சவப்பெட்டி“.
“பக்கத்து வீட்டுப் பெரியவர்
மரித்த மறுநாள் காலையில்
குப்பையில் பளிச்சென்று கிடந்தது
அவரின் சிரிப்பாய்
செயற்கைப் பல்வரிசை“
“பிணங்களை அலங்கரிக்கும் பின் நவீனத்துவக்காரி“ எனும் கவிதை அதிர்வினைத் தரும் புதிய முயற்சி. பிணங்களை அலங்கரிப்பவளைப் பற்றிய நீண்ட கவிதை ஒவ்வொரு வரியிலும் சாவின் கொடூரம் தெரிகிறது.  “பிணங்களை அலங்கரிக்கவே பிறந்ததுபோல் அவள் வாழ்கிறாள்” என எழுதுகிறார்.  “பிணங்களின் முகங்களைப் படித்துப் படித்து / அவள் மனசில் குவிந்து கிடக்கிறது / மரணக்குறிப்புகளின் துயரக் கவிதை.  மரணம் இந்த அளவுக்கு இளைய பாரதியைப் பாதிப்பதன் காரணம் அவர் வாழ்வில் நடந்த பயங்கரமான சாவு நிகழ்வு அடி மனத்தில் ஆழப் பதிந்தது காரணமாய் இருக்கலாம்.
காதல் கவிதைகளில் இளையபாரதி
    இளையபாரதியின் கவிதைகள் குறித்து கல்யாண்ஜி அவருக்கு எழுதிய கடிதத்தில் “இவ்வளவு தூரம் இரைக்க இரைக்க முந்திரித் தோப்புச் சருகுகளின் மூச்சுமுட்ட ஓடிவந்த பின்பும், ரோஜாக்களின் துரத்தல்களைப் பற்றி எப்படிப் பேச முடிகிறது.  அதுவும் ஒரு இருபது வயதுக் குரலுடன்“ என்கிறார்.  செம்புலப் பெயர் நீரில்... காதல் வரையும் கவிஞர்.
“ஒரு
முளைப்பாரியை
வனமாக்கியவள்
நீ“
என எழுதும் போது வியப்பு ஏற்படுகிறது.  முள்ளுக்கு அருகில்தாள் ரோஜா இருக்கும் என்ற முரண் மாதிரி.  நேசத்திற்குச் சங்கக் கவிதைகள் நிறைய சான்றுகள் தந்திருக்கின்றன.  ஆனால் இது போன்ற உவமை இல்லை.
“ரத்தச் சகதியாய்ச் சிதறிக் கிடக்கும்
மனித உடல்களைப் பார்த்த பிறகும்
விபத்தின் சாலையில்
விரைகின்ற பயணத்தைப்போல்
நேசிக்கிறேன் உன்னை“
காதல் கவிதை எழுதும் போதும் இளைய பாரதியால் சாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“மனப்பூர்வ சம்மதம்
மரணமாகவம் சூடிக்கொள்ள
சரி
என் சாம்பலைக் பூசிச்
சபதம் முடித்துக்கொள்
அகக் கவிதைகளில் உள்ளத்தை எழுதுவது என்பது மேலோங்கி உள்ளதை எழுதுவது பின்னுக்குப் போய் விட்டதைக் காண முடிகிறது.
ஆய்வு முடிவுகள்
இளைய பாரதியின் அகக்கவிதைகளில் காதலின் ஈரமும், புறக்கவிதைகளில் மரணக் குருதியும் கசிவதைக் காண முடிகிறது.  தமிழின் சங்க மரபுகளை அழகாக மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.  இவரது பாணியில் எழுதும் வழித் தோன்றல்கள் தோன்றக்கூடும்.  பொட்டில் அடித்தாற்போல மிக அழகாக, நேர்த்தியாக இவரால் கவிதை சொல்ல முடிகிறது.  மரணக் கவிதைகளை விடக் காதல் கவிதைகளில் இவரது திறன் மிகையாய் தெரிகிறது.  சில நீண்ட கவிதைகள் கூறியது கூறல் மரபில் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது.  கல்யாண்ஜி எழுதியதைப்போல் இவரின் கவிதைகள் இரத்த அழுத்தத்தை மாற்றுகின்றன.  அழிந்து போன பூம்புகார் இவரது “பட்டினப்பாலை“யால் கவி உருவம் பெற்றுள்ளது.  எந்தத் திரைகளுமின்றி இவரால் இயல்பாகக் கவிதை சொல்ல முடிகிறது.  கவிதைக்கான மென்மைத் தன்மை குறைந்து வன்மையாக, வளமாக மாறுவதை உணர முடிகிறது.  மொத்தத்தில் இளையபாரதியின் கவிதை ஆளுமை பட்டினத்தார் போன்று, சித்தர்களைப் போன்று உலகம் கடந்த பார்வையாகவே அமைகிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலம் நடத்தி “நெடும்புனல்“ தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  ஆய்வுக்கோவை. பக்.236 - 240

No comments:

Post a Comment