Wednesday, 13 July 2011

                                        உலகத் தரத்திலமையும் தமிழ்ச் சிறுகதைகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

முன்னுரை
    இந்த நுற்றாண்டின் இணையற்ற இலக்கிய இலக்கிய வடிவம் சிறுகதையாகும்.  பதினெட்டாம் நூற்றாண்டில் பரமார்த்த குரு கதை மூலம் வீரமாமனிவர் தொடங்கி வைத்த உரைநடைப்பிரவாகம் 1910–1920ல் வ.வே.சு. ஐயர் வாயிலாகக் குளத்தாங்கரை அரசமரம் சொன்ன கதையாகப் பொங்கிப் பாய்ந்தது.  “சுவை மிகுந்ததாகவும் 19ஆம் நூற்றாண்டின் வாழ்வியல் கூறுகளை மண்ணின் மணத்தோடு அழகாக அக்கதை பதிவு செய்தது.  உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சோதனை முயற்சிகளைப் பாரதி மேற்கொண்டார்.  1920 – 1950 வரை முப்பதாண்டுகளைத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்நோக்கு காலமாகக் கருதலாம்.  புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.ப.ரா. மௌனி என்று அற்புதமான சிறுகதை ஆசிரியர்கள் நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் வாழ்வியல் கூறுகளாய்த் தந்துள்ளார்கள்.  அவர்களின் கதைகளைப் பற்றியும் நேற்றைய இன்றைய நாளைய சிறுகதைகளின் போக்குகள் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.
சிறுகதை முன்னோடிகள்
    தமிழ் இலக்கியத்தை உள்வாங்கி அதைப்புதிய நோக்கோடும்போக்கோடும் தந்த புதுமைப்பித்தன் கதைகள் இன்றும் நூறாண்டுகள் கழித்து வாசித்தாலும் புதுமையாகவே இருக்கின்றன. உருவம் உள்ளடக்கம் உத்தி ஆகியவற்றில் சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்த தமிழ் மாப்பஸான் புதுமைப்பித்தனின் “காஞ்சனை“, சாபவிமோசனம் பொன்னகரம், சிற்பியின் நரகம் ஆகிய கதைகள் உலகத் தரம் மிக்கன.
    எளிமையோடும் இனிமையோடும் எதையும் ஆழத்தில் சென்று அலசும் தன்மை கொண்ட கு.ப. ராஜகோபாலன் குஞ்சம்மாளின் மனத்தில் இதயச் சூறாவளியை ஏற்படுத்தி நனவோடை உத்தியால் “விடியுமா“ கதையைச் சொன்ன உணர்ச்சி அலையைத் தமிழ் கூறு நல்லுலகம் திகைப்புடன் எதிர்கொண்டது கதைக்கு முன்னுரிமை தந்து ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதிய கல்கி, புதுமைப்பித்தனால் சமகாலத்தில் விமர்சிக்கப்பட்டாலும், கேதாரியின் தாயார் போன்ற சிறுகதைப் பங்களிப்பை மறுக்க இயலாது.
    புற உலகின் நிகழ்ச்சியை அப்படியே தராமல் அதை உள்வாங்கிப் புத்தி மட்டத்தில் அதை அலசி ஆழ்மனப் பதிவுகளோடு தருவதில் மௌனி தலை சிறந்து நின்றார்.  அவருடைய அழியாச் சுடர், மனக் கோலம் கதைகள் அப்போக்கின் சான்றுகள்.
    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு மணிக்கொடி ஆற்றியுள்ள பங்களிப்பு பாராட்டத்தக்கது.  புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. பி.எஸ்.ராமையா, க.நா.சு, சி.சு.செல்லப்பா என்று வலுவான சிறுகதை ஆசிரியர் அணி தமிழ்ச் சிறுகதைகளை வளமான வாழ்வியல் கூறுகளைக் கூறும் களமாக மாற்றிக் காட்டியது.  இந்திய தத்துவ மரபை உள்வாங்கி எழுதிய லா.ச.ரா. குடும்பக் கட்டுமானக் கதைகளை மற்றொரு தளத்தில் படம் பிடித்துக் காட்டினார்.  விந்தன். கு. அழகிரிசாமி, எம்.வி.வெங்கட்ராம், ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், ஆ. மாதவன் கரிச்சான்குஞ்சு, கி.ராஜகோபாலன் போன்றோர் தமக்கேயுரிய தனித்துவத்தோடு பதிவு செய்தனர்.  கரிசல்காட்டு எடக்கு உத்தியோடு கி.ரா.எழுதிய சிறுகதைகள் தனி வகையாயின.  அவருடைய கதவு கதையும் நாற்காலி கதையும் புதிய வரவுகள்.  தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமியின் கதைகள் சத்தமான விமர்சன யதார்த்த வகையில் அமைந்தன.  யாருக்காக அழுதான் போன்ற கதைகளைத் தந்த ஜெயகாந்தனின் வெக்கையைப் பலரால் தாங்க இயலவில்லை.  மு.வ.வின் கதைகளில் நீதி இலக்கியச் சாயல் அதிகம் இருந்தது.  வடிவ மாற்றத்திலும் ஆழ்ந்த சிந்தனையிலும் பல்லக்குத் தூக்கிகள் தந்த சுந்தரராமசாமிக்குக் காலச் சுவடு தேர்ந்த களமானது.  உண்மையை மென்மையாகச் சொன்ன அசோக மித்ரன் இந்திரா பார்த்தசாரதி போன்றோர் சிறந்த பங்களிப்பைத் தந்தனர்.
    தீபம் நா. பார்த்தசாரதியால் உருவாக்கப் பெற்ற வண்ணதசானின் விவரண நடை அழகியல் தன்மை வாய்ந்ததாக தமிழில் முன்னுதாரணம் அற்ற நடையாகத் திகழ்கிறது.  மற்றவர்கள் பார்க்கத் தவறி விடுகிற சிறிய பதிவுகளைக் கூட நுட்பமாகத் தன் சிறுகதைகளில் இவர் தருகிறார்.  தீபம் அணியின் வண்ணநிலவன்.  நாஞ்சில் நாடன் ஆகியோரின் கதைகள் புதிய நோக்கில் அமைந்துள்ளன.  ராஜம் கிருஷ்ணன், அம்பை தமயந்தி போன்றோரின் பெண்ணியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கன.
    மஞ்சள் நிறப் பூனைகள் தந்த நகுலன், பாலியல் தொழிலாளர்களைப் பரிவுடன் பதிவு செய்த ஜி. நாகராஜன், பெண்களின் அகவுலகை ஆழத்தில் பதிவு செய்த பாவண்ணன், கரிசல் மக்களோடு நேரடியாய் வாழ்ந்து கரிசல் வெம்மையைத் தன் எழுத்தில் பதிவு செய்துள்ள தமிழ்ச் செல்வன்.
    பூவுக்குக் கீழே, சாசனம் போன்ற கதைகளில் அரிய தருணங்களைப் பதிவு செய்த கந்தர்வண்.  நம் பண்பாட்டுப் பதிவுகளைக் கதைகளில் பதித்த
சா.கந்தசாமி, மரணம் குறித்த சிந்தனைத் தளத்தில் எழுதிய எஸ். சம்பத் ஆகியோர் தமிழ்ச் சிறுகதைச் சுடர்கள் ஆவர்.
    மண்ணின் மனத்தைக் கதைகளில் பதிவு செய்த வே. ராமமூர்த்தி சமகால முக்கிய எழுத்தாளராய்த் திகழும் ஜெயமோகன் ஆகியோரின் கதைகள் அர்த்தமுள்ளன.  இதுவரை தமிழில் சிறுகதைகள் படைத்துள்ள படைப்பாளிகள், அவர்களின் படைப்புகளில் சிறந்ததென விமர்சகர்கள் தரும் படைப்புகளும்
எண்
சிறுகதை ஆசிரியர்
சிறந்த சிறுகதை
ஆசிரியரின் ஊர்
பார்வை
1.
மகாகவி பாரதிகத்திச் சண்டைஎட்டயபுரம்எதார்த்தம்
2.
வல்லிக்கண்ணன்ஆண்சிங்கம்ராஜவல்லிபுரம்அங்கதம்
3.
ஜெயகாந்தன்மௌனம் ஒரு பாஷைகடலூர்-மஞ்சக்குப்பம்சமூக அவலம்
4.
தி. ஜானகிராமன்முள்கிரீடம்மன்னார்குடியை அடுத்த தேவங்குடிஉளம் சார்ந்த கதை
5.
ஆதவன்சினிமா முடிந்த போதுகல்லிடைக் குறிச்சிகுடும்பம்
6.
அசோகமித்திரன்புலிக்கலைஞன்சென்னைஎதார்த்தம்
7.
பி.எஸ். ராமையாநட்சத்திர குழந்தைகள்வத்தலகுண்டுஎழுத்துச் சித்திரம்
8.
ஆ. மாதவன்வேஷம்திருவனந்தபுரம்வறுமை
9.
மௌனிஅழியாச்சுடர்சிதம்பரம்மனஉலகப் பதிவு
10.
கி. ராஜநாராயணன்நாற்காலிஇடைச்செவல்கரிசல்காடு
11.
வண்ணதாசன்ரதவீதிதிருநெல்வேலிஅழகியல்
12.
வண்ணநிலவன்எஸ்தர்திருநெல்வேலிவறுமை
13.
கு. அழகிரிசாமிராஜா வந்திருக்கிறார்இடைச்செவல்பேச்சுநடை கிராமியம்
14.
புதுமைப்பித்தன்மகாமசானம்திருநெல்வேலிநையாண்டி
15.
எம்.வி. வெங்கட்ராம்ஏழைகும்பகோணம்சௌராஷ்டிர மக்கள் வாழ்வு
16.
நகுலன்ரோகிகள்திருவனந்தபுரம்எதார்த்தம்
17.
ஜி. நாகராஜன்ஆண்மைமதுரைபோலித்தனச் சாடல்
18.
ந. பிச்சமுர்த்திபதினெட்டாம் பெருக்குகும்பகோணம்தொன்மம்
19.
சுந்தரராமசாமிபல்லக்குத் தூக்கிகள்நாகர்கோவில்விமர்சனப் பார்வை
20.
ஜெயமோகன்பத்மவீயூகம் நாகர்கோவில்நாட்டார்
21.
தோப்பில் முகமது மீரான்அன்புக்கு முதுமை இல்லைதேங்காய்ப் பட்டணம்இஸ்லாமிய வாழ்வியல்
22.
சி.சு. செல்லப்பாஅறுபதுசென்னைமரபு சார்ந்தது
23.
மு. வரதராசனார்குறட்டை ஒலி-நீதி சார்ந்தது
24.
அகிலன் இதயச் சிறையில்-மென்மைக் காதல்
25.
விந்தன் முல்லைக்கொடியாள்-கிராமியம்
26.
பொன்னீலன்நித்யமானது-கரிசல்காடு
27.
ராஜாஜிஅறியாக்குழந்தை-புராணச்சாயல்
28.
வ.வே.சு.ஐயர்குளத்தங்கரை அரசமரம்வரகனேரிபுதிய தமிழ்மரபு
29.
அம்மை புனர்மும்பைபெண்ணியம்
30.
சூடாமணி அந்நியர்கள்சென்னைதாய்மை
31.
தமயந்திஅக்கக்கா குருவிகள்திருநெல்வேலிபெண்ணியம்
32.
நீல. பத்மநாபன்கடிகாரம்திருவனந்தபுரம்கலை
33.
கோணங்கிமதினிமார்களின் கதை கோவில்பட்டிவறுமை
34.
கரிச்சான்குஞ்சுரத்தச்சுவைகும்பகோணம்தத்துவம்
35.
தஞ்சை பிரகாஷ்பற்றி எரியும் தென்னைமரம்தஞ்சை மானம்புச் சாவடிஎளிமை
36.
பூமணிவயிறுகள்ஆண்டிபட்டிகரிசல்
37.
கு.ப.ராவிடியமாலால்குடிபுதியநோக்கு
38.
நாஞ்சில்நாடன்மிதவைகுமரிகிண்டல்
39.
ச. தமிழ்ச் செல்வன்வெளியோடு போய்பத்தமடைசமூகமாற்றம்
40.
சா. கந்தசாமிதக்கையின் மீது நான்கு கண்கள்-மண் சார்ந்த பதிவு
41.
சுஜாதாநகரம்ஸ்ரீரங்கம்விஞ்ஞானம்
42.
கிருஷ்ணன் நம்பிநீலக்கடல்அழகிய பாண்டியபுரம்முரண் சமூக விடுதலை
43.
பா. செயப்பிரகாசம்கரிசலின் இருள்கள்-சமூக விடுதலை
44.
மு. சுயம்புலிங்கம்ஊர்க்கூட்டம்வேப்பலோடைவெக்கைத் தன்மை
45.
பாவண்ணன்அடி பாண்டிச்சேரிமக்கள் குரல்
46.
கந்தர்வன்சாசனம்புதுக்கோட்டைமனிதம்
47.
அ.முத்துலிங்கம்அக்காயாழ்ப்பாணம்தேடல்
48.
வேல ராமமுர்த்திஇருளப்ப சாமியும் 21 கிடாயும் பெரு நாழிஅடித்தட்டு
49.
எஸ். சம்பத்சாமியார் ஜூவுக்குப் போகிறார் திருச்சிஉளவியல்
50.
பிரபஞ்சன்ஆண்களும் பெண்களும்பாண்டிச்சேரிவாழ்வியல்


குறிப்பிடத்தக்க சிறுகதைகள்
    கார்க்கில் செகாவ் டால்ஸ்டாய் கோகல் போன்ற எழுத்தாளர்கள் ருஷ்ய நாட்டு மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்திய மாதிரி தமிழ்ச் சிறுகதைகளும் தமிழ்ச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை மறுக்க இயலாது.  ஜெயகாந்தனின் எழுத்து வன்மை வாழும் சான்று.
1.    தமிழின் முதல் சிறுகதையாகத்திகழும் வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை உலகத் தரம் மிக்கதாய் அமைகிறது.
2.    கரு கதைப்பின்னல் பாத்திரப் படைப்பு ஆகியவற்றைத் தாண்டி தமிழ்ச் சிறுகதைகள் சுதந்திர நிலையில் பயணப்படுவதை உணர முடிகிறது.  சொற்சித்திரங்களாய் அமையும் புதுமைப்பித்தனின் கதைகள் அவரது காலத்துக்குப் பின்னரும் பிரஞ்சுச் சிறுகதைகளுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன.
3.    உலகத்தரத்தில் இணைய ஊடகம் வழி எழுதும் ஜெயமோகன் எஸ். ராமகிருஷணன், சுஜாதா போன்றோரின் கதைகள் உலகின் பல பகுதிகளில் எட்டியுள்ளன.
4.    திருநெல்வேலி, தாமிரபரணி, வளவுவீடு, குடும்பம் என அழகியலைப் பதிவு செய்யும் வண்ணதாசன் போன்றோரின் நுண்ணியப் பதிவுகள் வியக்க வைக்கின்றன.
5.    பாமா, சிவகாமி, ராஜ் கவுதமன், மாற்கு பூமணி போன்றோரின் தலித் படைப்புக்கள் வெகு இயல்பாய் அமைகின்றன.
ஆய்வு முடிவுரை
    வாழ்வியல் கூறுகளாகத் திகழும் நட்பு, கல்வி, அரசியல் ஆன்மிகம், உளவியல், தத்துவம், பெண்ணியம், மானுடவியல் என யாவற்றையும் உள்ளடக்கியதாய்த் தமிழ்ச் சிறுகதைகள் உலகத் தரத்தில் உருவாகின்றன.  பழைய பாதையின் புதிய பயணங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
    ஆனந்த விகடன் இதழுக்குப் பேட்டி தந்திருந்த ஜெயகாந்தன் “அணுகுண்டுகளுக்கும் புத்தகங்களுக்கும் ஒரே ஒரு வேற்றுமை.  அணுகுண்டு ஒரே ஒரு முறை வெடிக்கிறது.  புத்தகங்கள் திறக்கும் போதெல்லாம் வெடிக்கின்றன“ என்றார்.  இக் கூற்று இன்றைய தமிழ்ச் சிறுகதைகளுக்குப் பொருந்தும்.  தொடர்ந்து எழுதி வரும் இளைய கூட்டம் நாளை தமிழுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றுத் தருவது திண்ணம்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்திய தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை “வாழ்வியல் மேன்மை“ ஆய்வுக்கோவை, 

No comments:

Post a Comment