“கருணாமணாளனின் சிறுகதைகள் காட்டும் இஸ்லாமியர்களின் வாழ்வியல்“
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
முன்னுரை
கதைகள் காலத்தின் கண்ணாடிகள், பண்பாட்டின் பதிவுகள், குளத்தில் விழுகிற கல், அக்குளத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளைப் போல், படைப்பாளிகளின் மனத்தில் தோன்றும் அதிர்வுகள், சலனங்கள், அனுபவங்கள், எண்ணங்கள் ஆகியவை சிறுகதைகளாக, பெரும் புதினங்களாக உருப்பெறுகின்றன. நீண்ட நெடுங்கதைகளை யாப்பில் அமைத்துக் காப்பியங்களாகச் சுவைத்த தமிழன், தமிழில் உரைநடையின் வரவுக்குப்பின் வடிவத்தில் பெரும் மாற்றத்தை எதிர் கொண்டான். வீரமாமுனிவரின் “பரமார்த்த குரு கதை” அதற்கு அடியெடுத்துக் கொடுத்தது எனலாம். 1878ஆம் ஆண்டு தமிழின் முதல் நாவல் ”பிரதாப முதலியார் சரித்திரத்தை” மயிலாடுதுறை வேதநாயகம்பிள்ளை படைத்தளித்தார். 49 ஆண்டுகள் கழித்து 1927ஆம் ஆண்டில் தமிழின் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை“ எனும் கதையை வ.வே.சு. ஐயர் படைத்தளித்தார். “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி“ என் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களின் வாழ்வியலைத் தொடக்ககாலச் சிறுகதைகள் பதிவு செய்யவில்லை. வ.வே.சு. ஐயரின் “அனார்கலி“ எனும் கதை கு.ப.ரா.வின் “நூருன்னிசா“ போன்ற ஒரிரு கதைகள் இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமிட்டு எழுதப்பட்டன. ஐம்பதுகளுக்குப் பின்பே இஸ்லாமியக்கதைகள் அதிகமாக வெளிவரத்தொடங்கி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தன.
இஸ்லாமும் தமிழும்
அகிலத்தின் அழகிய முன்மாதிரியாகப் போற்றப்படும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் அருமுயற்சியால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாம் எனும் வாழ்வியல் மார்க்கம் உலகெங்கும் உன்னதமாகப் பரவியது. அதே கால கட்டத்தில் தமிழ் மண்ணோடு, தமிழ்ப் பண்பாட்டோடு இஸ்லாம் ஆழமாகப் பரவி வேரூன்றியது.
இஸ்லாமியர்களில் சிலர் தந்தையை “அத்தா“ என்றழைக்கின்றனர். இச்சொல் துருக்கிச் சொல்லென்று அறிஞர் அப்துல்ரஹிம் இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தில் குறிப்பிடுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சுந்தரமூர்த்தி நாயனாரின் “பித்தாபிறைசூடி பெருமானே அருளாளா“ எனும் தேவாரப்பாடலின் இறுதி அடி “அத்தா! உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே“ என முடிகிறது. இஸ்லாமியர் பயன்படுத்தும் உறவுச் சொல் அக்காலத்தின் தேவாரப் பாடலில் பதிவாகியிருக்கிறதென்றால், தமிழோடு தமிழரோடு அம்மார்க்கம் கொண்டிருந்த பாசப்பிணைப்பை நம்மால் அறிய முடிகிறது. தமிழின் அனைத்து இலக்கிய வகைகளிலும் முத்திரை பதித்தவர்கள் இஸ்லாமியர்கள். அரபு, பாரசீக, இந்துஸ்தானியச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர்களும் இவர்களே. இஸ்லாமியர் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது “சாந்தியும், சமாதானமும் உண்டாகுக“ என வாழ்த்தும் “சலாம்“ எனும் சொல்லை குமரகுருபர் “குறவர் மகட்குச் சலாம் இடற்கு ஏக்கறு குமரனை“ என்று எடுத்தாண்டுள்ளார். அவ்வகையில் நம்மாழ்வார் பிறந்த அழ்வார்திருநகரி எனும் ஊரிலே பிறந்து, தேன் தமிழை உருவாக, தீன் பெருமையைக் கருவாகக் கொண்ட ஆயிரம் கதைகளைப் படைத்த என்.எம்.அப்துல் ரவூப் எனும் இயற்பெயர் கொண்ட கருணா மணாளன் அவர்களின் படைப்புலகம் குறித்து இக்கட்டுரை விளக்க முயல்கிறது.
கருணாமணாளன் என்ற கருணைமிகு படைப்பாளி
திருநெல்வேலி, ரஹ்மத்நகர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கருமணாமணாளன் இஸ்லாமியச் சிறுகதையுலகில் சிறப்பிடம் பெற்றவர். 04.04.1934இல் ஆழ்வார்திருநகரியில் பிறந்த, 1949இல் இலங்கையிலிருந்து வெளிவந்த “நவஜீவன்“ இதழில் “நர்ஸ் அருணா“ எனும் முதல் கதையை வெளியிட்டவர். “வயது 67“ எனும் அவரது இரண்டாம் கதை குமுதம் வார இதழில் வெளியானது.
குருகூரான், கிருபாகரன், கருணாமணாளன் எனும் புனைப் பெயர்களில் சிறுகதைகள் படைத்த கருணாமணாளன் “முஸ்லீம் முரசு“ எனும் இதழில் அகத்திரை எனும் புதினத்தை 1.1.1962இல் வெளியிட்டார். நெருப்புக்குள் வசிக்கும் புழுக்கள், முடிவுரையில் ஒரு முன்னுரை, வெள்ளை ரோஜா, மும்தாஜி, பூமரக்கிளைகள் போன்ற எட்டுப் புதினங்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய மும்தாஜி எனும் புதினம் மலையாள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணி வார இதழ்களில் 1000 சிறுகதைகளை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் படைத்தவர். மணிவிளக்கு, முஸ்லிம் அரசு, நர்கீஸ், மதிநா, சிராஜ், இதயவாசல், மணச்சுடர் போன்ற இஸ்லாமிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர், 27 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்களின் ஆசிரியர், “மௌனத்தின் நாவுகள்“ எனும் சிறுகதைத்தொகுப்பு இவரது எழுத்தாற்றலைக் காட்டும் காலக்கண்ணாடி.
கருணாமணாளனின் படைப்புலகம்
1. கருணாமணாளனின் படைப்புலகம், கருணையும், ஒழுக்கமும், இஸ்லாத்தின் உயர்வான மதிப்பீடுகள் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.
2. திருமறையிலே வல்லஇறைவன் வகுத்தத்தந்த நற்கருத்துக்களை மீறும் மனிதன் என்னபாடுபடுகிறான் என்பதை இவரது கதைகள் காட்டுகின்றன.
3. இஸ்லாமியரின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு அமையும் இவரது கதைகளில், இஸ்லாமியப் பண்பாடு, பழக்க வழக்கம் நபிகள் பெருமானாரின் நல்லுரைகள் ஆகியன அழகாக விளக்கப்பட்டுள்ளன.
4. இஸ்லாத்துக்கு மாறான வரதட்சணை, தேவையற்ற மணமுறிவு, மூடநம்பிக்கை, வீண் ஆடம்பரம் ஆகிய கருத்தியல்களை இவரது கதைகள் கடுமையாகச் சாடுகின்றன.
5. இம்மை உலகின் சுகபோக இன்பங்களில் கரைந்து, மறுமை உலகை மறக்கும் முரண்பாடுடைய மனிதர்கள் இவரது படைப்புலகின் எதிர் நிலைப் பாத்திரங்கள்.
6. வறுமையிலும் செம்மையாக, உழைப்பை உயர்வாக எண்ணத் தூண்டும் உலகம் இவரது படைப்புலகம்.
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கலலூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி சாகிப் அவர்கள், கருணாமணாளனின் படைப்புலகைப் புதிய நோக்கில் காண்கிறார்கள் இப்படி “அவருடைய சிறுகதைகள், குடும்பத்தைச் சித்திரிப்பதாகவும், இஸ்லாமியச் சூழலில் தாமிரபரணி நதிக்கரை ஊர்களைச் சுற்றியுள்ளதாகவும் அமைந்து காணப்படும். சமுதாயத்தில் புரையோடிப்போய் இருக்கும் பல பிரச்சினைகளை அலசிப் பார்க்கும் வண்ணமாகவும், மூடக்கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும் சிறந்து விளங்கும்“ என்று “மௌனத்தின் நாவுகள்“ நூலில் குறிப்பிடுகிறார்கள். மொத்தத்தில் கருணாமணாளனின் படைப்புலகம் இஸ்லாமிய வாழ்வியலைக் காட்டும் கதைக் கண்ணாடி என்று கூறலாம்.
கருணாமணாளனின் கதையில் அல்குர்ஆன் அருள் உரைகள்
ஹாபிஸ் அப்ஸர் ஹுஸைனின் மனைவி லத்தீபா, கம்ப்யூட்டர் டிஸைன் செய்த சேலைக்கு ஆசைப்படுகிறாள். புனித இரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை தொழுவிப்பதற்காக அவளது கணவன் வெளியூர் சென்றான். பிறை தெரிந்துவிட்டது. கணவன் மணப்பாறையிலிருந்து வந்து விட்டான். நிறைய பணம் கிடைத்திருக்கும் என்ற கனவில் கணவனிடம் சேலை குறித்துக் கூறுகிறாள். லத்தீபா, அவனோ தன்னை ஹாபிஸாவாக உருவாக்கிய தன் குரு ஹஜ்ரத் குத்துப்தீன் அவர்கள் முதுமை நிலையில் தம் மகளின் திருமணத்தை நடத்த வழியின்றி வறுமையில் இருந்ததைக் கண்டு. தனக்குக் கிடைத்த ரூ.3000 அவரிடம் தந்து விட்டதாகக் கூறினான். அதுகேட்ட அவனது மனைவி லத்தீபா திருக்குர்ஆனிலிருந்து மறைமொழி சொல்வதாகக் கருணாமணாளன் “சொர்க்கக்கன்னிகை“ (மதிநா. 1986) எனும் கதை படைத்துள்ளார். ரமலானைக் கொண்டாடக் கம்ப்யூட்டர் சேலை கேட்ட லத்தீபாவே பேசுகிறார் இப்படி “ஒரு மனைவியானவள் கணவனுக்கு ஆடையாகவும், கணவனானவன் மனைவிக்கு ஆடையாகவும் விளங்க வேண்டுமென்று அல்லாஹ் சொன்னதாக சொன்னீங்களே. எனக்கு ஆடையாக அல்லாஹ் உங்களைத் தந்திருக்கும்போது இன்னொரு போலிஆடை வேண்டாங்க.“ என்று முடிக்கிறார்.
கருணாமணாளன் இதுபோல் நூற்றுக்கணக்கான கதைகளில் திருக்குர்ஆன் திருவசனங்களையே கதையில் உரையாடல் ஆக்கியுள்ளார்.
கருணாமணாளனின் கதைக்களம்
“நதிக்கரையோரத்தில்தான் நாகரீகம் தோன்றியது“ என மானுடவியல் கருத்துரைக்கிறது. கருணாமணாளனின் கதைகள் நடக்கும் களம் தாமிரபரணி பிறக்கும் பாபநாச மலையில் தொடங்கி, கடலோடு கலக்கும் புன்னக்காயல் வரை பரந்து விரிந்துள்ளது. சொர்க்கக் கன்னிகை (மேலப்பாளையம்), கிழிசல் (புதுமனை, மேலச்செவல்) மாப்பிள்ளை முதலாளி (வள்ளியூர்) குருடன் பொண்டாட்டி (காயல்பட்டினம்) பாய்கார பாய் (பத்துமடை), நாயகர் பட்சமடி (வீரவ நல்லூர்) தொட்டில்கள் (களக்காடு), கல்மனம் (செங்கோட்டை), பெண்புறா (கடையநல்லூர்) எனும் கதைகளைச் சான்றாகக் கூறலாம்.
கருணாமணாளனின் கதைக்கருக்கள்
தேவையற்ற மணமுறிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், அழகு நிலையாமை, திருமணமாகா முதிர்கன்னிகள் பிரச்சினைகள், மஹர் தொடர்பான வரதட்சணைச்சிக்கல்கள், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதால் குடும்பம் படும்பாடு, வரதட்சணைச்சிக்கல்கள், பீடி சுற்றுவோர், பாய் பின்னுவோர், கோழி ஆடு வளர்ப்போர் வாழ்வியல் நிலை, விதவை மறுமணம், தியாகம், தொழுகை, நோன்பு வலியுறுத்தல், போன்றவையே இவரது கதைக்கருக்களாக அமைகின்றன. இஸ்லாமிய “கொமர்“ பெண்களின் பிரச்சினைகளை மனரீதியாக எடுத்தாண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
குழந்தை பெறும் தன்மையற்ற உஸ்மான், மனைவி ஸீனத் கர்ப்பமானது தெரிந்தும், அவள் மீது ஏற்படும் சந்தேகம் அனைவரின் மனத்தையும் எவ்வாறு பாடாய்படுத்தும் என்ற கருவைக் கொண்டு ஆசிரியர் “நெருப்புக்குள் வசிக்கும் புழுக்கள்“ எனும் புதினத்தை எழுதியுள்ளார்.
கருணாமணாளன் படைத்துக் காட்டும் பாத்திரங்கள்
கதையின் உயிர்த்துடிப்பு பாத்திரப் படைப்பில்தான் இருக்கிறது. தன் குருவிற்காகக் கையில் உள்ள பணத்தை எல்லாம் தந்துவிடும் ஹாபிஸ் அப்ஸர் ஹுசைன் (சொர்க்கக் கன்னிகை) இலட்சியக் கதாநாயகனாகத் திகழ்கிறார். மனைவி இறந்துவிட்டாதாய் பொய் கூறி பலரிடமும் ஏமாற்றும் ஸிந்தா மதார் (கிழிசல்) வாசகனை முகம் சுளிக்க வைக்கிறார். மகளின் காதலுக்காகத் தன் கவுரவத்தை விட்டிறங்கி அவள் விரும்பியவனையே மணம் முடிந்து வைத்த அல்ஹாஜ் ஆஸிப், கண் பார்வை கிடைக்க அரும்பாடுபட்டவனையே அழகற்றவளாகப் பார்க்க முனைந்த பார்வையற்றவன் நஜீப்ஷா (குருடன் பொண்டாட்டி), இலட்ச ரூபாய் லாட்டரியில் விழுந்தபோதும் நேர்மை தவறாத பத்தமடை பாய்காரப் பாய் முஹப்பிலாஷா (பாய்பார பாய்) மனைவி மீது தவறாகச் சந்தேகப்பட்டு மணமுறிவு செய்து, தவற்றுக்காக மனம் வருந்திய ஜாகிர் ஹுசைன், விவகாரத்திற்காக இரண்டாம் கல்யாணம் செய்ய முடிவெடுத்த நிஷாத் மௌலானா. (விபரீத ஆசை), மக்கள் நலனையே உயிர்மூச்சாகக் கருதிய ஜமாஅத் தலைவர் தாஜீத்தின் என அனைத்தும் உயிரோட்டமுள்ள பாத்திரங்களாகத் திகழ்கின்றன.
மதுரை, ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் நடத்திய தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. ஆய்வுச்சிந்தனைகள், பக். 180 – 184.
No comments:
Post a Comment