அகில இந்திய வானொலி தூத்துக்குடி
“மூவர் தேவாரத்தில் இயற்கை”
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியனை, ஏகனை, எந்நாட்டவர்க்குமுரிய சிவனை, தென்னாடுடைய ஈசனைத் தேவாரம் பாடிப் பரவியர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தரெனும் மூவர் முதலிகள். பூவாரம் சூட்டி வேத நாயகனைப் போற்றினால் விரைவில் வாடிவிடுமென்று தேவாரம் பாடிப் பரவியவர்கள் தேவார மும்மூர்த்திகள்.
திருமனைப்பாடி நாட்டில் திருவாமூரில் மருள்நீக்கியாராகப் பிறந்து, சிவபெருமான் தந்த சூலைநோயால் திருநாவுக்கரசராக மாற்றம் பெற்றவர்; அரசன் துன்புறுத்தியபோது “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்“ என்று கம்பீரமாகப் பாடியவர். பழுத்த சிவப்பழமாகத் திருத்தொண்டு புரிந்தவர்; திருஞான சம்பந்தரால் “அப்பரே“ என்று அன்போடு அழைக்கப்பட்டவர். அப்பர் பெருமான் 49,000 பாடல்களைப் பாடியிருந்தாலும் 313 பதிகங்களே இன்று நமக்குக் கிடைத்துள்ளன. கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அப்பர் பெருமானின் பதிகங்கள் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சுந்தரப்பதிகங்களால் சுந்தரத்தமிழில் சுந்திரனாம் சிவபெருமானைப் போற்றிப்பரவிய சுந்தரமூர்த்தி நாயனார், திருமுனைப் பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் பிறந்தவர். திருமணக் கோலத்திலிருந்த சுந்தரரைத் திருவெண்ணெய்நல்லூரிலே சிவபெருமான் ஓலையைத்தந்து தடுத்து ஆட்கொண்டார்.
தம்பிரான் தோழரென்றும், நாவலூரார் என்றும், வன்தொண்டரென்றும் போற்றிப் புகழ்பெறும் சுந்தரமூர்த்தி நாயனார்
1. “பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
2. எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
3. வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
4. அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே“
என்று பாடிய சுந்தரர் 38000 பாடல்களைப் பாடியிருந்தாலும் 1026 பாடல்களே அதாவது நூறு பதிகங்களே கிடைக்கின்றன.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய தமிழ்ஞானசம்பந்தர் சீர்காழியில் பிறந்து 16000 பாடல்களைப் பாடி, பக்தி கொண்டு கூன் பாண்டியனை நின்றசீர் நெடுமாறனாக்கியவர் ஞானசம்பந்தப் பெருமான்; 384 பதிகங்களே இன்று நமக்குக் கிடைக்கின்றன.
பாலைக் கொடுத்து ஞானசம்பந்தரைச் சிவபெருமான் ஆட்டிகாண்டார். ஓலையைக் கொடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டார். சூலையைக் கொடுத்து அப்பரை ஈசன் ஆட்கொண்டார்.
தமிழ்ச் சொற்களைப் பூவாரமாகத் தொடுத்தெடுத்துத் தேவாரம் பாடி அதில் இறைவனைக் காட்டி இறவாப் புகழ் பெற்றனர்.
சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் அற்புத இலக்கியங்களாகத் திகழ்கின்றன. ஓல்காப்புகழ் பெற்ற தொல்காப்பியம், குறிஞ்சி முதல் பாலை வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை என்று அகத்திணையியலில் வகுத்து அழகு செய்கிறது. நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறது. 14 வகைக் கருப்பொருட்களான மரம், பறவை, விலங்கு, பூ, தெய்வம் என்று கருப்பொருளின் பின்னணியில் தொல்காப்பியம் யாவற்றையும் அணுகியது.
மூவர்தேவாரம் இயற்கையை இறைவனோடு இணைத்துப் பேசுகிறது. சிவபெருமான் சடாமுடியில் இழுத்துக் கட்டிய கங்கை நதியையும், தூ வெண் மதியையும், திரும்பத்திரும்ப மூவரும் வெவ்வேறு சொற்களால் பாடிப் பரவியுள்ளார்கள். ஆயிரக்கணக்கான சிவாலயங்களுக்கு மூவரும் நேரில் சென்று அவ்வூரின் இயற்கையைக் கண்டு, மனத்தில் மகிழ்ச்சி கொண்டு நதியையும், குளங்களையும், மரங்களையும், பூக்களையும் பதிகங்களில் பதிய வைத்தனர்.
“பிரமாபுரத்தைப் பாடிய ஞான சம்பந்தர் ஊழிக்காலத்தில் உலகெலாம் அழிய அப்போதும் அழியாமல் உலகிற்கே வித்தாகத் திகழ்ந்தது” என்று விளங்கும் திருஞான சம்பந்தர்.
“நீர் பரந்த நிமிர்புன்சடைமேல் ஓர் நிலா வெண்மதி சூடி“
என்று கங்கையைச் சடா முடியிலே கட்டி, நிலவினைச்சூடிய அழகினைப் பதிவு செய்கிறார்.
மன்னன் மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டு நீற்றறையிலிட்டு நீற்றுகிறான். அப்பர்பெருமான் அழகோவியமாக இயற்கையைப் பதிவு செய்கிறார். ஈசனாம் உலகின் நேசனாம், உமையம்மை, வாசனாம் சிவபெருமானின் இணையடி நிழல், மாசு இல் வீணை இசை போன்றது, மாலையில் மதிமயக்கும் தண்ணீர்ல் போன்றது. வீசு தென்றலைப் போன்றது, வீங்கிளவேனில் போன்றது, வண்டினங்கள் தங்கும் மலர்களைப் பெற்றிருக்கக் கூடிய பொய்கை போன்றது என்கிறார் அப்பர் பெருமான்.
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே“
இயற்கையை மையமிட்ட இனிமைத் தேவாரமாய் அப்பாடல் மலர்கிறது.
விண்ணோர் பெருமானை, எண்ணிலாப் புகழ்பெற்ற கயிலை மலைக் கோமானைச் சுந்தரர் பாடும் போது “திருப்புகலூர்ப்“ பதிகத்தில் இயற்கையை முன் வைத்து இறைவனைப் போற்றுகிறார்.
செந்தமிழ்ப் பனுவல்களால் சிவபிரானைப் பாடும் புலவர்களே! இயற்கையாகத் தோன்றிய நீர்நிலையாகிய பொய்கைகளும் செயற்கையாக அமைக்கப்படும். நீர் நிலையாகிய வாவிகளும் திருப்புகலூரிலே அதிகம். நீர்நிலைகள் நிறைந்திருப்பதால் திருப்புகலூரைப் பாடுங்கள், அப்படிப் பாடினால் சிவ அருள் பெற்று சிவலோகம் செல்லலாம் என்கிறார் நம்பி ஆரூரார்.
“பொய்கை வாவியின் மேதிபாய்
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐயனாயமர் உலக மாள்வதற்கியாதுமையுற வில்லையே“
என்று சிவன் திருவடிகளைத் தொடுவதற்கு இயற்கையை அடியொற்றிப் பாட சுந்தரமூர்த்தி நாயனார் வழி சொல்கிறார்.
சங்க இலக்கியத்தில் செய்தி சொல்லும் குறியீட்டு ஊடகங்களாகப் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்று போர்க்களத்தில் நடைபெறும் செய்திகளைப் பூக்களை வைத்து அறிய முடிந்தது. வெட்சிப்பூச்சூடி வீரர் சென்றால் அவர்கள் ஆநிரை கவரச் செல்கிறார்களென்றும் கரந்தை சூடிச்சென்றால் ஆநிரை மீட்டல் என்றும், வாகைப் பூச்சூடினால் வென்றார்கள் என்றும் சங்க இலக்கியங்கள் அறிவித்தன.
மூவர்தேவாரத்தில் குறிப்பாகத் திருஞானசம்பந்தர் தேவாரம் இயற்கையை அதிகமாக வருணிப்பதாக அமைகிறது. சம்பந்தரின் திருவீழிமிழலைப் பதிகத்தை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
“தேங்கொள் பூங்குமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கை பூ மகிழால் வெயிற்புகா வீழி
மிழலையான் எனவினை கெடுமே“
திருவலிதாயப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் “வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயம்“ என்று பொருள்பட
“வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால் அருள்மாலை தமிழ் ஆக
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர்வானத்து உயர்வாரே“
திருவலிதாயத்திலுள்ள சிவபெருமானின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச்செய்த இந்தத் திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு இசையோடு பாடவல்லார் குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர் என்கிறார் சம்பந்தர்.
சோழநாட்டின் காவிரி வடகரையில் உள்ள செழிப்பானதலம் கீழைத் திருக்காட்டுப் பள்ளி எனும் தலம், ஆரண்ய சுந்தரர், அகிலாண்ட நாயகியுடன் அருள் பாலிக்கும் திருத்தலம். திருஞானசம்பந்தருக்கு மிகவும் பிடித்த, இயற்கை கொஞ்சும் தலம்.
வயலின் கண் நீர்பாய, அதனால் மகிழ்வடைந்த செங்கயல் மீன்கள் துள்ளியோடி, வயலின் மீது தொங்கிக் கொண்டு இருந்த பூங்கொம்புகள் மீது உரச அதனால் சில மலர்களிலிருந்து தேன் வடிந்தது. கனிகளை ஈன்று பழங்கள் வெடித்து முதிர்ந்துள்ளன. இதனால் காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழ மணமும் திருக்காட்டுப் பள்ளியில் கமழ்ந்தன என்ற பொருளில் தமிழ் ஞான சம்பந்தர்.
“செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்
கை அருகே கனி வாழை ஈன்று – கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளிப்
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அண்யான், பணைத்தோளி
பாகம்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல்உலகே”
என்று பாடும்போது திருத்தக்கதேவர் ஏமாங்கத நாடு பற்றிப் பாடியது நினைவுக்கு வருகிறது.
திருவாரூர்ப் பதிகத்திலே சுந்தரமூர்த்தி நாயனார், திருவாரூரை இயற்கை எழில் கொஞ்சும் அற்புதத் தலமாகக் காட்டுகிறார். “வண்ணமும் வடிவும்மிக்க சிறந்த பவழங்கள் திகழும் சோலைகளால் சூழப்பட்ட திருவாரூர்“ எனப் புகழ்கிறார்.
“செந்தண் பவழந்திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்“ என அவ்வரிகள் அமைகின்றன.
“நாராய் நாராய் செங்கால் நாராய்“ எனும் சங்கஇலக்கிய வரிகளை நினைவுபடுத்தும் வகையில் திருவாரூர்ப் பதிகத்தில் சுந்தரர்.
“தினைத் தாளன்ன செங்கால் நாரை
சேரூந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போன்மாலைப்
புரிபுன் சடையீரே“
“கொன்றை மலரின் பொன்போன்று மிளிரும் மாலையினை அணிந்த திருச்சடையைப் பெற்றிருக்கும் சிவபெருமானே!” என்று சுந்தரர் பாடுகிறார்.
பிறவியைக் கடலாகச் சித்திரிக்கும் சுந்தரர், அக்கடலைக் கடக்கும் கலனாகப் பிறப்பை உருவகிக்கிறார்.
“கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்
கலந்த சொல்லாகி“
திருவையாறுப் பதிகத்திலே சிவபெருமானை வர்ணிக்கும் சுந்தரர் “காரக்கொன்கொன்றை சடைமேலொன்றுடையாய்“ என்கிறார்.
பிளவுபட்ட ஒற்றைப் பிறை நிலவையும்,
“முல்லை நிலத்துக் காணப்படும் கொன்றை
மலர் மாலையையும் சூடியவனே“
என்று இயற்கை எழில் கொஞ்சச் சுந்தரர் பாடுகிறார்.
திருக்கச்சூர் ஆலக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை, நீர்வளம் மிகுதியாக இருப்பதால் அன்னப்பறவைகள் அகலாது பெருகி வாழும் தன்மை வாய்ந்த வயல்களால் சூழப்பட்ட திருக்கச்சூர் சிவபெருமானே! எனும் பொருளில்
“அன்ன மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயிலம்மானை“
என்று சுந்தரர் பாடுகிறார். தாண்டகவேந்தர் அப்பர் பெருமான் இயற்கையைப் போற்றுகிறார்.
“முளைக் கதிரிளம் பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர்“
என்று சிவபெருமானின் சடையிலிருந்து பொங்கும் கங்கை நீரில் இளம்பிறை மூழ்கிக்கிடந்தது என்ற கற்பனையை முன் வைக்கிறார். திருச் செம்பொன்பள்ளிப் பதிகத்தில்
“கானறாத கடிபொழில் வண்டினம்
தேனறாத திருச்செம்பொன் பள்ளியான்“
என்று எழில் கொஞ்சும் சோலையையும் வண்டினங்களையும் நாவுக்கரசர் அழகுறப் பாடுகிறார். திருத்தாண்டகத்திலே திருநாவுக்கரசு சுவாமிகள்
“வண்டோங்கு செங்கமலங் கழுநீர்மல்கி
மதமத்தஞ் செஞ்சடைமேல் மதியஞ்சூடி“
என்று சிவபெருமானைப் பாடிப் பரவுகிறார்.
சிவபெருமானை வணங்க
“நறுமாமலர் கொய்து நீரின் மூழ்கி
நாடோறு நின்கழலே யேத்தி வாழ்த்தி
துறவாத துன்பந் துறந்தேன்“ எனப் பாடுகிறார்.
போற்றித் திருத்தாண்டகத்தில் சிவபெருமானைப் போற்றிப்பாடும் அப்பர் பெருமான்
“பொறையுடைய பூமிநீர் ஆனாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மாலை எழுந்த மதியே போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
நீறேறு மேனியுடையாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி“
என்று இயற்கையை மையமிட்ட போற்றிப் பாடலை அப்பரடிகள் பாடி வணங்குகிறார். தட்சணாமூர்த்தியாக தென்திசை நோக்கி அமர்ந்த சிவ பெருமானை
“ஆலநிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி“ எனப் பாடுகிறார்.
திரு அண்ணாமலை திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அண்ணா மலையாரை திருஞானசம்பந்தர்
“பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்,
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்“ எனப் பாடுகிறார்.
திருநறையூர் பதிகம் திருஞானசம்பந்தரின் இயற்கைச் சிந்தனைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
திருநறையூரிலே குயில்கள் அழகிய குருக்கத்தி மரங்களில் வாழ்கின்றன. குளிர்ந்த சுரபுன்னைகளும், வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்துள்ள திருத்தலமாக திருநறையூர் திகழ்கிறது.
“குயில் ஆர் கோல மாதவிகள், குளிர்பூஞ் சுரபுன்னை
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழிமல்கு சம்பந்தன்
பயில்வார் இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே“
இயற்கை எழில் கொஞ்சும் திருநறையூர் சிவபெருமானை நினைத்தால் பாவம் நாசமாகும் என்கிறார் தமிழ் ஞானசம்பந்தர்.
திருவடுகூர் பதிகத்திலே திருஞான சம்பந்தர்
திருப்பரங்குன்றம் பதிகத்தில் திருஞான சம்பந்தர் சிவபெருமானை
“நீர் இடம் கொண்ட நிமிர்சடைதன் மேல் நிரைகொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும்“ எனக்குறிப்பிடுகிறார்.
அப்பரும் சுந்தரரும் ஆளுடைய பிள்ளையும் பூவாரமணம்வீசும் தேவாரப் பாடல்களால் இயற்கையைப் போற்றினார்.
கங்கை பொங்கி வருதலையும், பிறைநிலவைச் சிவபெருமான் சூடியிருத்தலையும் அழகாகப் பாடியுள்ளார்கள்.
செல்கிற இடத்திலுள்ள நதிகளையும், மலைகளையும், வயல்களையும், பூஞ்சாரல்வீசும் நிலங்களையும் மூவரும் போற்றிப்புகழ்ந்தனர். திருநெல்வேலிக்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் தண்பொருநைக் கரையோரம் அமைந்திருக்கும் இடத்தைக் கண்டு மகிழ்ந்து, பூக்கள் சிந்திக் கிடக்கும் துறை எனவே இவ்விடம் “சிந்துபூந்துறை“ என அழைக்கப்படட்டும் என்று அழகியல் உணர்வோடு பெயரிட்டு மகிழ்ந்ததைத் திருநெல்வேலிப் பதிகம் அழகாகக் காட்டுகிறது.
நதிகளையும், தண்மை வீசும் நிலவினையும், மூவரும் திரும்பத்திரும்பப் பாடியதன் உட்பொருள் இயற்கையைப் போற்றுதலாகும். இயற்கையைப் போற்றுவதன் மூலம் இறைவனைப் போற்றிய பெருமக்கள் மூவர் முதலிகள்.
திருநெல்வேலியின் வேணு எனும் மூங்கில் மரமும் திருக்குற்றாலம் திருக்கோவிலின் குறும்பலாமரமும், புன்னை மரமும் வழிபாட்டுக்கு உரியனவாக கருதப்படுகின்றன. இயற்கைக்கு மத்தியில் இறைவனைப் பாடும் போது இன்னும் அழகாக அருள்பாலித்ததை அவர்கள் உணர்த்தினார்கள்.
முன்னோர் பொன்னாகக் காத்த இயற்கையை நாமும் காத்து அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஈசனின் இணையடி நிழலை உவமிக்க வீசுதென்றலையும், மூசுவண்டறைப் பொய்கையையும், அப்பர் பெருமான் சான்றாகத் தருவதும், கங்கைக் காட்சியை மூவரும் இடைவிடாது தொடர்ந்து பாடுவதும், “இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்“ என்ற உணர்வினை நமக்கு ஊட்டுகிறது. “வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது செய்ய“ என்று திருச்சிராப்பள்ளிப் பதிகத்திலே திருஞானசம்பந்தர் பாடுவதைப்போல தண்மை தரும் சாரலும், வீங்கினவேனிலும் நீடிக்க வெண்டும் என்றால்
“மூவர் போற்றிய இயற்கையை வானத்துத்
தேவர் போற்றிய இயற்கையை
நாமும் போற்ற வேண்டும்“.
என்பதுதான் இன்றைய உலகிற்குச் சொல்லும் செய்தியாக இருக்கமுடியும்.
தூத்துக்குடி அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரைப் பதிவு
No comments:
Post a Comment