Sunday, 23 October 2011

காலத்தை வென்ற ஞாலக்கவிஞன் பாரதி
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி  : 09952140275
Email : nellaimaha74@gmail.com

மாநிலம் பயனுற வாழ்வதற்கான வல்லமையைப் பாரதி, பராசக்தியிடம் வரமாகக் கேட்கிறான்.
    பாரதிதாசனாரும் ஆத்திசூடியில் நல்ல சிந்தனைகளை விதைக்கச் சொல்கிறார்.  வெறும் பேச்சு பேசேல் என்று கூறும் பாவேந்தர்.
    “தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்வாடப்
    பல செயல்கள் செய்து
    நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
    கொருங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
     வேடிக்கை மனிதரைப் போல
    வீழ்வேனெ நினைத்தாயோ”
என்ற பாரதியின் வரிகளை அடியொற்றியே ஆத்திசூடி படைத்துள்ளார்.
“வையம் வாழ வாழ்” என்ற பாவேந்தரின் வரி, பொதுமைச் சமுதாயத்திற்கு மக்களை அழைத்துச் செல்கிறது.  “கெடு நினைவு அகற்று, சோர்வு நீக்கு” எனும் ஆத்திசூடிப் பாடல் வரிகளில் “நல்ல எண்ணம் வேண்டும்” என்ற உயரிய நீதி நிலை பெறும். சிந்துக்குத் தந்தை, செம்மொழித் தமிழின் கம்பீரக்கவிக்குழந்தை எட்டயபுரத்து மண் ஈன்ற பண் சுமந்த பைந்தமிழ் தேர்ப்பாகன், தமிழில் புதிய மரபுகளின் தொடக்கமாக அமைகிறார்.  நூறாண்டுகள் வாழ வரங்கேட்ட மகாகவிபாரதி இம்மண்ணில் வாழ்ந்தது முப்பதொன்பது ஆண்டுகளே!
    புதுக்கவிதையின் பிதா மகனாக, தேர்ந்த மொழி பெயர்ப்பாளராக, சீரிய அரசியல் பார்வை கொண்ட பத்திரிக்கையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சீர்திருத்த செம்மலாக பாரதி எடுத்த ஆவதாரங்கள் ஆயிரம்... ஆயிரம்...
    1898ஆம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குச் சென்றார்.  அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத் தேர்வில் தேர்ச்சிபெற்ற, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம் இந்தி மொழிகள் பயின்றார்.  1898 முதல் 1902 வரை அவர் வாழ்ந்த காசி வாழ்க்கை அவரைச் சீர்திருத்தவாதியாக மாற்றியது.  “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று சினப்பட்ட பாரதி, தன் சுய சரிதையில் இப்படி எழுதுகிறார்.
    “தாழுமுள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல் தாவித்தாவிப் பல பொருள் நாடுவோர், விழுமோரிடையூற்றினுக்குக் கஞ்சுவோர், விரும்பும்யாவும் பெறாரிவர் தாமன்றே, விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர், விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர், வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர், சதிகள் செய்வர், பொய்ச் சாத்திரம் பேசுவர், சாதகங்கள் புரட்டுவர் என்று பட்டியல் இடுகிறார்.”  இந்திய புராணக் கதைகளில் மரணத்தின் அதிபதியாக இருக்கும் “எமனை” பாரதி காலருகில் அழைத்தார்.
    “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன, காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று கம்பிரமாகப் பாடிய பாரதி உணவைத் தேடியுண்டு, உணவு செரிக்கப்பழங்கதைகள் பேசி, பிறர் வாழ்வில் சிக்கல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் வேடிக்கை மனிதர்களைப் போல வாழ விரும்பவில்லை.
    “தேடிச்சோறு நிதந்தின்று – பல
    சின்னஞ்சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பல செயல்கள் செய்து
    நரைகூடிக் கிழப்பருவமெய்தி
    கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப் போலே
    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”
என்ற பாரதியின் வரிகள் தன்னம்பிக்கையின், தனித்துவத்தின் வசந்த வரிகளாகத் திகழ்கின்றன.   காளி தேவியிடம் வரம் கேட்டும் பாரதி,
   
காளி நீ காத்தருள் செய்யே,
    மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்
    மாரவெம் பேயினை அஞ்சேன்”
என்று கம்பீரமாகப் பேசிய பாரதி, புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகச் சொல்கிறார்.
    கல்வியெனும் கலங்கரை விளக்கால் மட்டுமே கடலில் தவிக்கும் வாழ்க்கைப் படகுக்கு வெளிச்சம் தர முடியும் என்று பாரதி கருதினார்.
    “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
    இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்
    பயிற்றுப் பலகல்விதந்து இந்தப்
    பாரை உயர்த்திட வேண்டும்”
என்று கவிபாடினார்.
    தமிழப்புதுக் கவிதையின் முதல் வசன கவிதை எனச் சிறப்பு பெறும்
“காட்சி” கவிதையில் பாரதி யாவற்றையும் ரசிக்கச் சொல்கிறான்.
    இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான்
    இனிமையுடைத்து, காற்றும் இனிது,
    தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது,
    ஞாயிறு நன்று, திங்களும் நன்று,
    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
    மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
    கடல் இனிது, மலை இனிது, காடு நன்று
ஆறுகள் இனியன... உயிர் நன்று
சாதல் இனிது”
என்று கூறிய மாகவி  பாரதி  “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”
என்று கூறினார்.  உண்மைதான், வரகவிகளுக்கு மரணமில்லை.
                              “பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழ் இன்பம்”
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி  : 09952140275
Email : nellaimaha74@gmail.com
    கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குப் பின் தமிழ்த்தாய் தவமாகத் தவமிருந்து பெற்ற கண்மணியர் இருவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியும், தமிழ் நாட்டுக்கொரு பாவேந்தர் பாரதிதாசனும் இறவா வரம் பெற்ற எழுச்சிக் கவிஞர்கள். இருவரும் தமிழாசிரியர்கள், இருவரும் தேச விடுதலை வேள்வியில் தம்மையே நெய்யாக மாற்றித் தந்தவர்கள், இருவரும் தளர்ந்து கிடந்த மக்கள் மனத்தில் தன்னம்பிக்கை ஊட்டியவர்கள்.
    “அச்சம் தவிர்“ என்று பாரதி ஆத்திசூடியைத் தொடங்கியது பாவேந்தரைக் கண்டு தானோ அவருடைய மன உறுதியைக் கண்டு தானோ என்ற எண்ணத் தோன்றுகிற அளவிற்கு அஞ்சா நெஞ்சராக, அழகுத் தமிழ் காவலராகத் திகழ்ந்தவர் பாரதிதாசனார். கவியரசு கண்ணதாசன் பாவேந்தரைப் பற்றி எழுதும்போது  “அதிர்ந்ததிந்தப் பூமி அவர் நடையில் என்றால் அழகுதமிழ் நடையினையும் சேர்த்தே சொன்னேன்” எனக் குறிப்பிட்டார்.
    இந்திய வரலாற்றில் 1908ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டு, கனக சுப்பு ரத்தினம் பிறந்த புதுவைக்கு மகாகவி பாரதி நுழைகிறார்.  வேணு நாயகர் வீட்டுத் திருமணத்தில் முதன் முதலாகப் பாரதிதாசனாரைப் பாரதி சந்திக்கிறார்.  பாரதியாரின் மனத்தில் இடம் பிடிக்கிறார்.  பாரதியார், வ.வே.சு. ஐயர், டாக்டர் வரதராஜலு, மகான் அரவிந்தர் ஆகியோரோடு தொடர்பு கொள்கிறார்.  பாரதியின் காகித ஆயுதமான “இந்தியா“ இதழை மறைமுகமாகப் பதிப்பித்து உதவுகிறார், 1908 முதல் 1918 வரை பாரதியாருக்குப் பேருதவியாகப் பாரதிதாசனார் திகழ்கிறார்.
    பாரதியின் பார்வை தேசியப் பார்வை என்றால், பாரதிதாசனின் பார்வை தமிழ்ப் பார்வை எனக் கொள்ளலாம்.  தமிழின் இனிமையைத் திரும்பத் திரும்பச் சொன்ன கவிஞராக, தமிழ் என்ற புள்ளியை மையமாகக் கொண்டே தன் கவிதை வட்டத்தை வரைந்த கவிஞராக, தமிழரின் நீண்ட தொன்மையை எளிய கவியில் உணர்வுபொங்கச் சொன்ன தமிழுணர்வுக் கவிஞராகப் பாரதிதாசனாரைக் கொள்ளலாம்.
    “தமிழ் என் கிளவியும் அதனோரற்றே” என்று தொல்காப்பியரால் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் தமிழ், திராவிட மொழிகளின் தாயாகத் திகழ்கிறது.
    “இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று பிங்கல நிகண்டு தமிழுக்கு விளக்கம் தருகிறது.  பாவேந்தரின் கவிதைகள் தமிழின் இனிமையை அழகாகச் சொல்லும் கவிதைகளாகத் திகழ்கின்றன.  உண்ணும் உணவு, உணரும் இன்பம், உடன் வரும் உறவோர், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை இவையாவற்றையும் பின்னுக்குத் தள்ளுகிறது.  தமிழின் இனிமை என்கிறார் பாவேந்தர்.
“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிர் இளநீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்”
என்று அழகுக் கவிதை படைத்தார் பாவேந்தர்.
தமிழ் மந்திரமாகத் திகழும் திருமந்திரத்தில் திருமூலமாமுனிவர்
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
என்று குறிப்பிட்டுள்ளார்.  
    மகாகவி பாரதி தேச விடுதலைக்காகப் பாடி எழுச்சியூட்டி 1921ஆம் ஆண்டில் மறைகிறார்.  பாரதியின் தாசனாகத் தன்னை உருவகித்துக் கொண்ட பாவேந்தர், காலத்திற்கேற்ப கருத்தாக்கத்தை மாற்றிக் கொள்கிறார்.
“சுதந்திரம் பெற்று விட்டோம்“  அடுத்த நிலை, தமிழ் மொழியை  மையமிட்ட தமிழ்ச் சமுதாயத்தை ஒன்றுபட்ட, தொன்மையை உணர்ந்த தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைப்பதுதான் தன் பணி என வரையறுத்துக் கொண்டார்.  மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பிரச்சாரம், சமூகவிடுதலை என்று இலக்கு மறக்கடிக்கப்பட்ட தமிழின் இனிமையைத் திரும்பத்  திரும்பச் சொல்வது மற்றொரு  இலக்கு என்று தீர்மானித்து  பாவேந்தர், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழின் அருமையான இலக்கண நூலான தொல்காப்பியம் பிறந்ததென்றால், அதற்கு முன்பே ஈராயிரம் ஆண்டுகள் அம்மொழி கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வரிவடிவங்கள் உருவாக்கப்பட்டு அதன் பின்னரே இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கும் என்று பாவேந்தர் உறுதியாக நம்பினார்.  பாற்கடலில் கிடைத்த அமுதை உண்டவர்களுக்குச் சாவு இல்லை என்பதைப் போல், தமிழ் அமுதைப் பருகியவர்களுக்கும் இறப்பிலை என்று பாவேந்தர் பதிவு செய்தார்.
    “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
    தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
    தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
    தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்.
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
    தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ ”
    தமிழை அமுதாக, நிலவாக, மணமாக மதுவாக, பாலாக, வானாக, தோளாக, தாயாக உருவகித்த பாவேந்தர் “வளமிக்க உளமுள்ள தீ” யாக முடிக்கிறார்.  “தமிழ்” என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லி மகிழும்போது “அமிழ்து அமிழ்து” என்று அழகாய் ஒலிப்பதைக் காதுகள் கம்பீரமாய் அறிவிக்கின்றன.
    சீறி எழும் சிலம்பும், மேவு புகழ் மேகலையும், பத்து எட்டொடு குண்டலகேசியும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், தித்திக்கும் திருக்குறளும், சமூக வியாதி அகற்ற நீதி சொன்ன நாலடியும், ஏலாதியும், திரிகடுகமும், ஒப்பற்ற கதைகள் சொன்ன பெரிய புராணமும், கம்பநாடர் ராமாயணமும், தமிழின் நவீன இலக்கியங்களும் வரிசையாகச் சொன்னவற்றைப் பாவேந்தர் உள்வாங்கிக் கவி புனைந்தார்.
    “எல்லே இலக்கம்” என்ற தொல்காப்பிய நூற்பாவிலுள்ள “இலக்கம்” என்ற சொல், “இலக்கு கூட்டல் அம்” எனப் பகுக்கப்படுகிறது.  “இலக்கை இயம்புவது” எதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் எனக்கற்றுத் தருகிறது.   
இரவீந்திரநாத் தாகூர் “கீதாஞ்சலி” எனும் ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தது அவரது தாய் மொழியான வங்கமொழியில், தேசப்பிதா மகாத்மா காந்தி தன் சுய சரிதையை எழுதியது அவரது தாய் மொழியான குஜராத்தி மொழியில் தாய் மொழியில் தான் சிந்திக்க முடியும், சுதந்திரமாகக் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும், அதற்குத் தமிழ் மொழிவழிக் கல்வியே தமிழ் நாட்டுக்கு அவசியம்“ என்று பாரதிதாசனார் எண்ணினார்.
    “தமிழ்ப்பேறு” எனும் கவிதையில் அக்கருத்தைப் பதிவு செய்கிறார் பாவேந்தர் “இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.  அன்னதோர் காட்சி இரக்க முண்டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே! இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவ் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்” என்ற அற்புதத் தீர்வைப் பாவேந்தர் பயனுறத் தருகிறார்.
    தமிழகத்தில் கி.மு.க்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே சங்கங்கள் இருந்தன.  கடல்கோளுக்குள்ளான லெமூரியாவில் தென் மதுரையில் கபாடபுரத்தில், மதுரையில் தமிழ்ச் சங்கம் நிலைபெற்று இலக்கியங்களை உருவாக்கித் தந்தது.
    பாரதப் போரில் பங்கேற்ற இருபுறத்துப் படையோருக்கும் பெருஞ்சோறளித்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் புறநானூறு பதிவு செய்கிறது.  மூவேந்தர் குறித்துப் பல இலக்கியங்கள் குறித்துரைக்கின்றன.  உடைந்து கிடந்த தமிழ்மக்கள் தமிழால் “ஒன்றாதல் கண்டு பகைவர்கள் ஓடி ஒளிந்தார்கள் என்று பாவேந்தர் “சங்கநாதம்“ பாடுகிறார்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
    இன ஒற்றுமையை மொழியின் அடித்தளத்தில் பாவேந்தர் கட்டமைத்தார்.  
    “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
    தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே”
என்று பாரதி பாடியதைப் போல “தமிழ்” என்றவுடன் பாவேந்தருக்கு சக்தி பிறந்து யாவரையும் ஒன்றாக்கத் துடிக்கிறார்.
    “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி” அடுத்தடுத்த நூற்றாண்டுகளின் அசுர வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று பாவேந்தர் விரும்பினார்.
“எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோமில்லை” என்று குமுறும் பாவேந்தர் தம் குருநாதர் பாரதியை மனத்தில் நிறுத்துகிறார்.  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டுவர நினைக்கிறார்.  இறவாத தமிழ் நூல்கள் தமிழில் வர எண்ணுகிறார். “தமிழ் வளர்ச்சி” என்ற கவிதையிலே தமிழ் வளர வழி சொல்கிறார்.
“எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும், வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.”
”தனியொருவனுக்கு உணவிலையெனில்
சகத்தினை அழித்திடுவோம்”
என்று பாரதி சொன்னதைப் போல், எளிமையினால் ஒரு தமிழன் படிக்காமல் போனால் தமிழகத்திலுள்ள அனைவரும் நாணவேண்டும்.  என்ற செய்தி நோக்குதலுக்குரியது.
    72 ஆண்டுகள் 11 மாதம் 28 நாள் வாழ்ந்த பாரதிதாசன் சங்க இலக்கிய மரபில் இயற்கையைக் கொண்டாடி அதன் பின்னணியில் புதிய கருத்துக்ளோடு இலக்கியங்கள் படைத்தார்.  தொல்காப்பிய மரபில் அவர் கவிதைகளில் உள்ளுறை, உவமம், இறைச்சிப் பொருள் ஆகியவற்றைக் காண முடியும்.  பாரதிதாசனுக்கு “தமிழகமே உலகம்” அவர் காண விரும்பிய உலகம் “தமிழ் உலகம்”
    தமிழ் உணர்வூட்டுதல், தமிழின் வேர்களை அடுத்த கிளைகளுக்குத் தெரியப்படுத்தித் தன்னம்பிக்கை ஊட்டுதல், தமிழால் தமிழரால் எல்லாம் முடியும் என்று புரியவைத்தலே பாவேந்தரின் இலக்கிய நோக்கு “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ, கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ, பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாகமோ, பிறர் சூழ்ச்சி செந்தமிழை மாய்ப்பதுண்டோ!” என்று சினந்து கேட்கும் பாரதிதாசன் தமிழரின் தனித்துவம் மிக்க மூவாயிரம் ஆண்டு தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகத் தெரிகிறார்.
    அவர் கண்ட கனவு அற்புதக் கனவு.  அது தளரா நம்பிக்கை கொண்ட தமிழ்க் கனவு, “எந்நாளோ?” எனும் கவிதையில் அவர்
    “என்னருந் தமிழ்நாட்டின் கண்
    எல்லோரும் கல்வி கற்றுப்
    பன்னருங் கலை ஞானத்தால்
    பராக்கிரமத்தால் அன்பால்
    உன்னத இமயமலைபோல்
    ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
    இன்புற்றார் என்று மற்றோர்
    இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
    கைத்திறச் சித்திரங்கள்,
    கணிதங்கள் வான நூற்கள்
    மெய்த்திற நூற்கள், சிற்பம்
    விஞ்ஞானம் காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னம்
    புத்தக சாலை எங்கும்
    புதுக்கு நாள் எந்த நாளோ?
    வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
    வீரங் கொள் கூட்டம், அன்னார்
    உள்ளத்தால் ஒருவரே
    மற்றுடலினால் பலராய்க் காண்பார்”
    பாரதிதாசன், வெள்ளம் போன்ற கோடிக் கணக்கான தமிழர் கூட்டம் இருந்தாலும், “உள்ளத்தால் ஒருவரே” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
    பாவேந்தரின் கவிதைகள் பார்போற்றும் கவிதைகள்,
    தமிழ் அடையாளத்தின் தன்னிகரற்ற கவிதைகள்
    தனித்துவத்தின் தமிழ்க் கவிதைகள்.

Sunday, 7 August 2011

                     சி. பா. ஆதித்தனாரின் இதழியல் சாதனைகள்
பேராசிரியர் முனைவர் . மகாதேவன், எம்.., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

மொழி உணர்வு அற்றுப் போய்விட்ட காலச் சூழ்நிலையில் அவ்வுணர்வினை ஊட்டும் எழுச்சிமனிதர்களின் தேவை கட்டாயமாகிவிட்டது.  சுதந்திர உணர்வு குன்றிய காலத்தில் பாரதியின் எழுதுகோல் எரிமலையாக எழுச்சியை ஏற்படுத்தியது.  நாளிதழ்கள் யாவும் ஆங்கிலத்தில் அல்லது வடமொழி கலந்து எழுதி வந்த காலகட்டத்தில் தந்தியின் தந்தையாக, தமிழர் தந்தையாகத் தோன்றி இதழியல் துறையில் சாதனை படைத்த மாமனிதர் பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.சிவந்தி பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் அவர்கள். சி.பா. ஆதித்தனார் 1905 ஆம் ஆண்டு அப்போதைய நெல்லை மாவட்டத்தின் காயாமொழி எனும் ஊரில் பிறந்தார்.  தமிழரின் சிறப்பை உலகறியச் செய்ய நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார்.  தமிழுக்காகப் பலமுறை சிறை சென்ற தூய தமிழ்த் தொண்டராகவும் அவர் திகழ்கிறார்.  உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என வாழ்ந்தார்.  தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் தலைமையேற்றுத் தொண்டு புரிந்தபோது திருக்குறளை இவர் அரியணையில் அமரவைத்தார்.
இதழாளர் சி.பா. ஆதித்தனார்
    தமிழைப் பாமர மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாகச் செய்தித்தாளைக் கருதினார் சி.பா. ஆதித்தனார்.  ஆதித்தனாரின் இதழியல் பணி செய்திக் கடிதங்களிலிருந்து தொடங்கியது.  இலண்டனில் இருந்தவாறே டைம்ஸ் ஆப் இந்தியா, ஆஜ் போன்ற இதழ்களுக்குச் செய்திக் கடிதங்கள் வரைந்தார்.  அம்மாநகரிலிருந்து வெளிவரும் ஸ்பெக்லேட்டர் இதழில் ஆதித்தனார் எழுதினார்.  உலக ஏடுகளை எல்லாம் உற்று நோக்கிய ஆதித்தனார் தமக்கென்று தமிழில் தனித்துவம் மிக்க நாளிதழ் தொடங்கப் பேராவல் கொண்டார்.  சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ்முரசு நாளிதழ் போலத் தமிழ்நாட்டில் மதுரையை மையமாகக் கொண்டுமதுரை முரசு எனும் இதழைத் தொடங்கி நடத்த, அதை ஆங்கிலேய அரசு தடை செய்ததால் தமிழன் எனும் நாளிதழைத் தொடங்கினார்.  முனைவர் என். ரெங்கநாதன் குறிப்பிடுவதைப்போல1942 இல் ஆகஸ்ட் 23 ஆம் நாளன்று தமிழன் முதல் இதழ் வெளிவந்தது.  பக்கத்திற்குப் பக்கம் படங்கள் அன்றைய கல்கி (10.09.1942) இரு வண்ணங்களில் அச்சிடப்படும் இதழ் தமிழ்நாட்டில் தமிழன் இதழ்தான் என்று பாராட்டியது.  அச்சமயத்தில்தான் தினத்தந்தி நாளிதழும் வெளியிடப்பட்டது.  தந்தி 15.10.1942 இல் பதிவு செய்யப்பட்டு 01.11.1942 இல வெளியாகிறது.  தினத்தந்தி இவ்வாறு உருப்பெறுகிறது.

சி.பா ஆதித்தனாரின் இதழியல் உத்திகள்
    தமிழரால் தமிழருக்காக நடத்தப்படும் இதழே தமிழன் எனத் தமிழ்ப்பற்றுக் கொள்கையோடு இதழைத் தொடங்கிய சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்கு இதழ்களை வெளியிட்டார்.
    வாசகனுக்குத் தேவையான செய்திகளை, பாமர மொழியில் கொச்சைச் சொற்களை நீக்கிப் புரியும்படி எழுதினார்.  எழுத்துக்கூட்டித் தேநீர் கடையில் படிப்பவன் கூடத் தினத்தந்தி வாசனானான். (.கா.) மாவட்ட ஆட்சித்தலைவரைக் கலெக்டர் என்றே தினத்தந்தி வெளியிடுகிறது.
    செய்திகளை முந்தித் தருவது தந்தி எனும் நிலையைச் சி.பா. ஆதித்தனார் உருவாக்கி உயிர்த்துடிப்புள்ள நாளிதழ் தினத்தந்தி என விளம்பரப்படுத்தினார்.
    யாரையும் குறை கூறாத தன்மையோடு தந்தியைத் தந்ததால், அரசியல் மாற்றங்கள் தினத்தந்தியின் விற்பனையைப் பாதித்ததில்லை.
    இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன அச்சு இயந்திரத்தை ஆதித்தனார் பயன்படுத்தியதால், அதிரடியாக வரும் அதிகாலைச் செய்திகளைக் கூட உடனடியாக அச்சிட்டு, காலை 6 மணிக்குத் தந்துவிட முடிந்தது.
    செய்தித்தாள் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர் சேரன்மகாதேவியில் உடை மரங்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் சன் காகித ஆலையை உருவாக்கினார்.  இதனால் பல பக்கங்களை வாசகர்களுக்குக் குறைந்த விலையில் தர முடிந்தது.
    பரபரப்பான செய்திகளை எட்டுப் பத்தியில் பருத்த எழுத்துக்களில் தலைப்பிட்டு வாசகரைக் கவர்ந்தார்.
    கருத்துப்படம் கேலிப்படங்களைத் தினத்தந்தியில் வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
    காது விளம்பரங்கள், வரி விளம்பரங்கள், வேலைவாய்ப்பு விளம்பரங்கள் என விளம்பர வருவாயைப் பெருக்கி இதழை வளர்த்தார்.
    திரைக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தி நேர்முகம், கட்டுரைகள், திரை விமர்சனங்கள் வெளியிட்டதால் திரை விளம்பரங்களும் தந்தியை எட்ட உதவி செய்தார்.
    தினத்தந்தியின் ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டும் வகையில் இதழாளர் கையேட்டினை வெளியிட்டார்.  இந்திய இதழியல் வரலாற்றில் இப்படிப்பட்ட அனுபவ, யதார்த்தமாக அமைந்த நூல் இதுவரை வந்ததில்லை என அறிவுலகம் பாராட்டும்படி அமைந்தது.  இன்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பயிலும் மாணவர்களுக்கு அந்நூல் வழிகாட்டியாக அமைகிறது.
    எல்லாப் பதிப்புகளையும் (14) அச்சிட்டு அனுப்பும் இடம் இரயில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையுமாறு செய்தவர் ஆதித்தனார்.  இதனால் ஓரிரு மணிக்குள் தந்தி பட்டி தொட்டிகளில் எல்லாம் கிடைக்க வழி செய்தார்.
    ஆதித்தனார் பரபரப்பான பெரிய எழுத்துக்களால் சுவரொட்டிகளைத் தயாரிக்கச் செய்து எல்லாக் கடைகளிலும் பளிச்சென்று தெரியுமாறு தொங்கவிடச் செய்தார்.  இதனால் அவ்வப்போது வாங்கிப் படிக்கும் வாசகர்களை ஈர்த்து நிரந்தர வாசகர்களாக மாற்றிக் கட்டிப்போட்டார்.
    வாசகருக்குப் புரியாத வெளிநாட்டுச் செய்திகளைத் தருவதை விட, அடுத்த தெருவில், அடுத்த ஊரில் நடக்கும் உள்ளுர்ச் செய்திகளைப் படத்துடன் ஆதித்தனார் வெளியிட்டதால் தந்தி பல இலட்சங்களை எட்டியது.
    சினிமாப் பாடல்களுடன் கூடிய ஆண்டியார் பாடுகிறார்.  தத்துவம் மூலம் நாசூக்காக விளக்கும் சாணக்கியன் சொல் இவை எல்லாம் ஆதித்தனாரின் மனத்தில் உதித்த உத்திகள்.
    மக்களின் சோதிட நம்பிக்கையை மனத்தில் கொண்டு ஆதித்தனார் சோதிடம், நாள், வார, மாத, வருடப் பலன்களை வெளியிட்டார்.
    காகிதவிலை உயர்வால் ஏனைய நாளிதழ்கள் விலையை ஏற்ற, சொந்தக் காகித ஆலையை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார் குறைந்த விலையில் தந்தியைத் தந்தார்.
ஆதித்தனார் சகாப்தம்
    பாரிஸ்டர் பட்டம் பெற்ற இலண்டனில் உயர் படிப்பு முடித்து வந்த மாகத்மா காந்தி, இந்திய சுதந்திரத்திற்காகத் தன் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைத் தந்து வென்று காட்டியதற்காக அவரைத் தேசப்பிதா எனப் பாரதம் பெருமையோடு அழைக்கிறது.  அதேபோல பாரிஸ்டர் பட்டம் பெற்று இலண்டன் வரை சென்று சாதித்த மாமனிதர் ஆதித்தனார், வழக்கறிஞராக நிலை பெற்றிருந்தால் பல கோடிகள் சம்பாதித்திருக்க முடியும்.  அதை எல்லாம் விட்டு, தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ் இதழியலுக்காக, அரும்பாடுபட்டதால் தமிழர் தந்தை எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டியது.
    நான் தமிழ்ப் படிக்கக் கற்றுக் கொண்டதே தினத்தந்தியைப் பார்த்துத்தான் என முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண்சிங் குறிப்பிட்டார் என்றால் அதற்கு வித்திட்ட ஆதித்தனாருக்கு என்ன வார்த்தைகளால் நன்றி சொல்ல?  ஆங்கிலம் மட்டுமே உயர்ந்த மொழி, தமிழ் பேசுவது கேவலமானது, குறைவானது என இருந்தநிலையில் இதழை ஓர் இயக்கமாக மாற்றி இலட்சக்கணக்கான வாசகரை எட்டியவர் சி.பா. ஆதித்தனார்.
    அறிவித்தல், அறிவுறுத்துதல், வணிகம் செய்தல், மகிழ்வித்தல், எண்ணத்தை உருவாக்குதல் எனும் இதழியல் நோக்கங்களோடு, செயல்படத் தூண்டுதல் எனும் புதிய போக்கும் சி.பா. ஆதித்தனாரால் உருவானது.  சதக் சதக்என்று குத்தினான் என உணரச்சியோடு சம்பவத்தை வாசகர் மனத்திரையில் படமாக ஓட்டிக் காட்டிய சி.பா. ஆதித்தனாரின் உத்தியை இன்று பல இதழ்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டதை அறியமுடிகிறது.
    தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து இன்றைய சூழலில், சுவையாகச் சூடாகச் செய்தித் தாட்கள் வெளிவராவிட்டால் அழிவை நோக்கிச் செல்ல நேரிடலாம்.  முந்தைய நிமிட சம்பவத்தை அடுத்த நிமிடத்தில் தொலைக்காட்சிச் செய்திகள் படத்தோடு வெளியிடும் நிலையில் செய்தித்தாள் வெறும் செய்திகளை மட்டும் வெளியிட்டு வென்றுவிட முடியாது.  நாளிதழைச் சுவாரசியமாக்க, வாசகனைக் கவர்ந்திழுக்க சி.பா. ஆதித்தனாரின் இதழியல் உத்திகளைப் பயன்படுத்தியே தீர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.  நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினாலே 10 ரூபாய் தண்டத் தொகை கட்ட வேண்டிய வருந்தத்தக்க நிலையில் தமிழ்நாடு இருக்கும் நிலையில் ஆதிததனாரின் நாம் தமிழர் இயக்கத்தின் தேவையும் அவருடைய தமிழ்ப்பற்றுடைய பார்வையும் இந்த நூற்றாண்டுக்கென மறுபதிப்புச் செய்ய வேண்டியுள்ளது.  அவ்வகையில் காலத்தைக் கடந்து நிற்கும் ஐயா சி.பா.ஆதித்தனார் பாரதியைப் போலத் தீர்க்கத்தரிசியே என்பதில் ஐயமில்லை.  நூற்றாண்டு கடந்து இன்றும் சகாப்தமாகத் திகழும் சி.பா.ஆதித்தனாரின் இதழியல் சாதனைகளை இன்னொருவர் செய்வது சாத்தியமில்லை.
பயன்பட்ட நூல்கள்
1.    சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழா மலர். ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.
2.    குப்புசாமி குரும்பூர், அமைச்சர் ஆதித்தனார், ராணி பதிப்பகம்,
சென்னை – 7, 1978.
3.    சாமி. .மா. (1990) இதழாளர் ஆதித்தனார், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.    கலைவாணி. சோ. (1982) இதழியல் உத்திகள், ஸ்ரீ பராசக்தி வெளியீடு குற்றாலம்.
(இக்கட்டுரை ஆசிரியர் பாரதப் பிரதமரின் சத்பவனா தேசியவிருநது (1994) பெற்றவர்)
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்கக் கல்லூரி நடத்தியஆதித்தனாரின் தமிழ் இதழியல் தொண்டுஎனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.